சாங்தே, ஜிங்கன் அதிரடி நீக்கம் | 26 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி அறிவிப்பு!
இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், 'ஆண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரர்' விருதை வென்ற இரண்டே நாட்களில் நட்சத்திர வீரர் லால்லியன்சுவாலா சாங்தே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Published : September 1, 2026 at 12:58 PM IST
ஹைதராபாத்: பிரேசில், உருகுவே மற்றும் பனாமா ஆகிய நாடுகளுக்கு எதிரான சர்வதேச நட்பு ரீதியிலான போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணியை தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் அறிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு அடுத்தடுத்து உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை விருந்தாக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தயாராகி வருகிறது. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற பிரேசில் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிக்கு இடையே, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் விளையாடிய உருகுவே மற்றும் பனாமா அணிகளுக்கு எதிராகவும் இந்தியா விளையாடவுள்ளது.
அதன்படி, இந்திய கால்பந்து அணி எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் தேதி பனாமா அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெறும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் முன்னாள் உலகச் சாம்பியனான பிரேசில் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி, அக்டோபர் 3ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
🇮🇳 Men’s national team head coach Khalid Jamil 🗣️ “This is a very important window for us, with three challenging matches against teams that played at the World Cup. Playing Brazil and Uruguay in Kolkata, after facing Panama in Bengaluru, will give the players valuable experience… pic.twitter.com/pQdVwvkWTI
— Indian Football (@IndianFootball) September 1, 2026
மேற்கொண்டு, அக்டோபர் 6ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, உருகுவே அணியை எதிர்த்துப் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்திய கால்பந்து ரசிகர்கள் இப்போட்டிகளைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இப்போட்டிகளுக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, ஏஎஃப்சி ஆசிய கோப்பைக் கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் அணியில் பல அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார். அதில் மிக முக்கியமாக, இரண்டு நாட்களுக்கு முன்புதான் 'ஆண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரர்' விருதை வென்ற லால்லியன்சுவாலா சாங்தேவுக்கு இந்த இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது தவிர, அணியின் மூத்த வீரரான சந்தேஷ் ஜிங்கன், ஜிக்சன் சிங், ராகுல் பேகே, விஷால் கைத் மற்றும் லிஸ்டன் கொலாசோ ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களின் நீக்கம் காரணமாக, சோம் குமார், ஜெய் குப்தா, பிரம்வீர், ரிக்கி மீடே ஹாபாம் மற்றும் முகமது சனான் போன்ற இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
India’s squad for the September-October FIFA Men’s International Match Window. 🐯
— Indian Football (@IndianFootball) August 31, 2026
The #BlueTigers’ training camp will begin on September 14 in Bengaluru.
September 26: 🇮🇳 vs 🇵🇦
October 3: 🇮🇳 vs 🇧🇷
October 6: 🇮🇳 vs 🇺🇾
Read more 🔗 https://t.co/T8KgsPnPYz#IndianFootball pic.twitter.com/1qN9O14uOa
இதையும் படிங்க: |
இந்திய அணி
கோல்கீப்பர்கள் : அல்பினோ கோம்ஸ், குர்பிரீத் சிங் சந்து, பிரப்சுகன் சிங் கில், சோம் குமார்.
டிஃபெண்டர்ஸ் : அபிஷேக் சிங் தெக்சாம், ஆகாஷ் மிஷ்ரா, அன்வர் அலி, பிஜாய் வர்கீஸ், ஹ்மிங்தன்மாவியா ரால்டே, ஜெய் குப்தா, பிரம்வீர், ரிக்கி மீடே ஹாபாம்.
மிட்ஃபீல்டர்ஸ் : அனிருத் தாபா, ஆஷிக் குருனியன், ஃபரூக் சவுத்ரி, லாலெங்மாவியா ரால்டே, மெகார்டன் நிக்சன், முகமது சனான், ரிக்கி ஷபோங், சஹல் அப்துல் சமத்.
ஃபார்வர்ட்ஸ் : எட்மண்ட் லால்ரின்டிகா, இர்பான் யத்வாத், மன்வீர் சிங், ரஹீம் அலி, ரையன் வில்லியம்ஸ், விக்ரம் பிரதாப் சிங்.
மாற்று வீரர்கள் : ஹிருத்திக் திவாரி, சிங்லென்சனா சிங் கொன்ஷாம், ரோஷன் சிங் நௌரெம், சுரேஷ் சிங் வாங்ஜம்.

