ஐஎஸ்எல் 2026-27 |போர்ஜா மார்டினெஸ் இரட்டை கோல்; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு எஃப்சி த்ரில் வெற்றி!
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் போர்ஜா மார்டினெஸ் ஆட்டத்தின் 22 மற்றும் 75ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.


Published : October 10, 2026 at 8:14 PM IST
ஹைதராபாத்: ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணிக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் போட்டியில் பெங்களூரு எஃப்.சி அணி 3–2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்திய கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026-27 ஆம் ஆண்டிற்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 13-ஆவது சீசன் இன்று பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் சொந்த ரசிகர்களின் ஆதரவோடு களம் கண்ட பெங்களூரு எஃப்சி அணி, அறிமுக அணியான ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களைக் குதூகலப்படுத்தினர். இதில் அபாரமாக விளையாடிய பெங்களூரு எஃப்சி அணிக்கு, ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் போர்ஜா மார்டினெஸ் மூலம் முதல் கோல் கிடைத்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய டெல்லி அணிக்கு, ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் ரோட்ரின்கோ கோலடித்து அசத்தினார்.
A first-half that had a goal, an equaliser and an own-goal. Safe to say #MGISL13 is off to a banger! 🔥 #MGISL13 #BFCSCD https://t.co/EEQIGBulBE
— MG Indian Super League (@IndSuperLeague) October 10, 2026
இதன் மூலம் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. இதனைத் தொடர்ந்து, 32வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிஃபெண்டர் மென்னோ கோச் பந்தைத் தடுக்க முயன்றபோது, அது துரதிர்ஷ்டவசமாக 'ஓன் கோலாக' மாறியது. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணி 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று பெங்களூரு அணிக்கு அதிர்ச்சியளித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் பெங்களூரு அணி அபாரமாக கம்பேக் கொடுத்தது. குறிப்பாக, அந்த அணி டிஃபென்ஸில் எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், தாங்கள் கோலடிப்பதற்காக ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். இதன் பலனாக, ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் போர்ஜா மார்டினெஸ் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
அதன்பின் ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், 89ஆவது நிமிடத்தில் மென்னோ கோச் கோலடித்து பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுபக்கம், இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோலடிக்கக் கடுமையாக முயற்சி செய்த ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணியால், எதிரணியின் பலமான டிஃபென்ஸைக் கடந்து எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியவில்லை.
The two moments that turned the tide in the favour of the Blues in #BFCSCD. Watch #MGISL13, live on YouTube and SonyLIV. 📺 https://t.co/KxJrsLEud8
— MG Indian Super League (@IndSuperLeague) October 10, 2026
| இதையும் படிங்க |
இதனால் ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்.சி அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐஎஸ்எல் தொடரையும் பெங்களூரு எஃப்சி அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து பெங்களூரு அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சென்னையின் எஃப்சி அணியை இதே மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

