ETV Bharat / sports

அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கவலையளிக்கிறது - இர்ஃபான் பதான்

இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 2, 2026 at 9:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் மீண்டும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து மார்ச் 4 ஆம் தேதி முதல் அரையிறுதி போட்டிகளும், மார்ச் 8 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்காக இந்த நான்கு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்த கவலையை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் மீண்டும் கவலை அளிக்கிறது. கடந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்ததன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸுடனும் ரன்கள் எடுப்பார் என்று தோன்றியது.

ஆனால் அவர் இந்த போட்டியில் தவறான ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்திருந்தார். ஏனெனில் அவர் பந்துகளை நேராக அடிக்காமல், குறுக்காக ஆட முயற்சிப்பதே அவுட் ஆவதற்கு முக்கிய காரணம். அதனால் அரையிறுதி போன்ற பெரிய போட்டிகளில், ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை இழக்காமல், முதலில் ஒரு சிங்கிள் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இர்ஃபான் பதான் கூறுவது போல் இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபிஷேக் சர்மா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏனெனில் தனது அறிமுக ஐசிசி தொடரில் விளையாடி வரும் அபிஷேக் சர்மா, முதல் 3 லீக் போட்டிகளிலும் ரன்கள் ஏதுமின்றி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்துள்ளார். அதன்பின் தென்னாப்பிரிக்காவுடன் 15 ரன்களிலும், ஜிம்பாப்வேவுக்கு எதிராக 55 ரன்களையும் எடுத்திருந்தார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் சர்மா மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அவர் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக எதிர்வரும் அரையிறுதி போட்டியில் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

இதையும் படிங்க

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்