ஐபிஎல் 2026 எலிமினேட்டர்: சன்ரைசர்ஸை வீழ்த்தி குவாலிபையர் 2-க்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.


Published : May 27, 2026 at 11:25 PM IST
சண்டிகர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஜெய்ஸ்வால் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் வழக்கம் போல் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி 16 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த சூர்யவன்ஷி அதிவேக சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் என மொத்தமாக 97 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
We are out of words 👏👏
— IndianPremierLeague (@IPL) May 27, 2026
9⃣7⃣(29) of absolute force from Vaibhav Sooryavanshi 🔥🔥
Updates ▶️ https://t.co/OBIYYIuhbt #TATAIPL | #Eliminator | #TheFinalLeap | #SRHvRR pic.twitter.com/gtt63Wwkx1
அவரைத்தொடர்ந்து 29 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரெல் மற்றும் ரியான் பராக் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் பராக் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து அசத்திய துருவ் ஜுரெலும் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பிரஃபுல் இங்கே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அபிஷேக் சர்மா ரன்கள் ஏதுமின்றியும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்மாறன் ரவிச்சந்திரன் ஒரு ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 18 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த நிதிஷ் குமார் - சலீல் அரோரா இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர்.
2️⃣ early wickets, 1️⃣ signature celebration 🫶
— IndianPremierLeague (@IPL) May 27, 2026
Updates ▶️ https://t.co/OBIYYIuhbt #TATAIPL | #Eliminator | #TheFinalLeap | #SRHvRR pic.twitter.com/PdzGUqHPz5
இதில் நிதிஷ் குமார் ரெட்டி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 38 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னிலும், சலீல் அரோரா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 35 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் ஷிவங் குமார் 27 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதையும் படிக்கவும் |
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

