ETV Bharat / sports

விக்கெட் விழுந்தாலும் எங்கள் ஆட்டம் மாறாது - இந்திய அணியின் திட்டம் குறித்து திலக் வர்மா ஓபன் டாக்

விக்கெட் விழுந்தாலும், அடுத்த பந்தில் சிக்ஸ் அடிப்போம் என்பதுதான் எங்களுடைய சிந்தனை என இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

திலக் வர்மா
திலக் வர்மா (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : February 27, 2026 at 12:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதி சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

அதேசமயம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பெரிதளவில் ரன்களை சேர்க்க முடியாமல் விமர்சனங்களை எதிர்கொண்ட திலக் வர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அவர் வெறும் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 44 ரன்களை சேர்த்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தனது பேட்டிங் குறித்து பேசிய திலக் வர்மா, "அணிக்கு என்ன தேவையோ, அதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று நான் எப்போதும் கூறுவேன். மேலும் நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாகவே இதனை செய்து வருகிறேன். அதன் காரணமாக ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் பேட்டிங் செய்ய முடியும். இன்று அதனை செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

தொடர்ந்து டாப் ஆர்டர் குறித்து பேசிய திலக் வர்மா, "தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அளிக்கும்போது, ​​அது மிடில் ஆர்டர் வீரர்களுக்கு கூடுடல் நம்பிக்கையை தருகிறது. இன்றைய தினம் சஞ்சு சாம்சன் ஒரு அருமையான இன்னிங்ஸை கொடுத்தார். அவர் தொடங்கிய விதம் மற்ற வீரர்களுக்கு கூடுதம் நம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில் போட்டிக்கு முன்னதாக நாங்கள் எங்களுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விவாதித்து, அதன்படி விளையாடினோம்" என்றார்.

தனது அணுகுமுறை குறித்து பேசிய திலக், "இப்போது ஒரு விக்கெட் விழுந்தால், அடுத்த பந்தில் சிக்ஸ் அடிப்போம் என்பதுதான் எங்களுடைய சிந்தனை. ஏனெனில் அது பந்து வீச்சாளருக்கு மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும். என்னை பொறுத்தவரையில் பந்து என்னுடைய ரேஞ்சில் இருந்தால், முதல் பந்தில் சிக்ஸரை அடிப்பேன். அதன்பின் சூழலிற்கு ஏற்றது போல் என்னுடைய இன்னிங்ஸை விளையாடுவேன்" என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் போட்டி குறித்து பேசிய அவர், "நாங்கள் மற்ற போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் வேலை வெற்றி பெறுவதுதான் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினால், உங்களுடைய ரன் ரேட்டும் அதிகரிக்கும். அதனால் ஒரு அணியாக, வெற்றி பெறுவது மட்டுமே முக்கியம் என்று நாங்கள் உணர்ந்தோம். எங்கள் கிரிக்கெட் நன்றாக இருந்தால், மற்றவற்றை கடவுள் பார்த்துகொள்வார்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க

இதையடுத்து மார்ச் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.