ETV Bharat / sports

ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் 2026: சாம்பியன் பட்டம் வென்று அமர்யா பஜாஜ் சாதனை!

முன்னதாக சீனாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2026 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமர்யா பஜாஜ் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்யா பஜாஜ்
அமர்யா பஜாஜ் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : July 7, 2026 at 12:45 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற டச்சு ஜூனியர் ஓபன் 2026 ஸ்குவாஷ் தொடரில், இந்தியாவின் 13 வயது இளம் வீரர் அமர்யா பஜாஜ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

13 வயதுக்குட்பட்டோருக்கான (அண்டர்-13) டச்சு ஜூனியர் ஓபன் 2026 ஸ்குவாஷ் தொடர் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் இந்திய அணி சார்பில் அமர்யா பஜாஜ் பங்கேற்றார். தொடர் முழுவதும் உலகின் முன்னணி ஸ்குவாஷ் நாடுகளைச் சேர்ந்த வீரர்களை எதிர்கொண்ட அமர்யா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அதன்படி, முதல் சுற்றில் எகிப்து வீரருக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் எளிதான வெற்றியைப் பதிவு செய்த அமர்யா, இரண்டாவது சுற்றில் இங்கிலாந்தின் ஆர்லோ ஸ்மித்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன்பின் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிங்கப்பூரின் கேலன் லோவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய அவர், காலிறுதி ஆட்டத்தில் எகிப்தின் பத்ர் ஹசனை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

தொடர்ந்து நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில், ஐரோப்பாவின் முதன்மை வீரரான ஹங்கேரியின் அலெக்ஸ் கோஸ்ட்யூவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் முன்னணி வீரர் டேனியல் ஸ்டீவன்சனை எதிர்கொண்ட அமர்யா, தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் 3-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்து, டச்சு ஜூனியர் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க:

முன்னதாக, சீனாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2026 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமர்யா பஜாஜ் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார். அந்த சாதனை நிகழ்த்திய அடுத்த சில வாரங்களிலேயே அவர் மீண்டும் ஒரு சர்வதேசப் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். இளம் வயதிலேயே இரண்டு ஆசிய ஜூனியர் பதக்கங்களையும், தற்போது ஐரோப்பிய பட்டத்தையும் வென்றுள்ள அமர்யா, சர்வதேச ஜூனியர் ஸ்குவாஷ் அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வருகிறார்.