ETV Bharat / sports

சேப்பாக்கில் களமிறங்கும் சஞ்சு சாம்சன்? பேட்டிங் பயிற்சியாளர் கோடக் தகவல்

நாளை சென்னையில் நடைபெற இருக்கும் வாழ்வா, சாவா ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சஞ்சு சாம்சன் - ரிங்கு சிங்
சஞ்சு சாம்சன் - ரிங்கு சிங் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 25, 2026 at 7:04 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதை சமன் செய்ய, சஞ்சு சாம்சனை களமிறக்குவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட நிலையில், அந்த போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து நாளை (பிப்ரவரி 26) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் வாழ்வா, சாவா ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மட்டுமில்லாமல், அதிக ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது அணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கோடக், "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய போட்டியில் இந்தியா சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, பேட்டிங் வரிசையை வலுப்படுத்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதை சமன் செய்ய, சஞ்சு சாம்சனை களமிறக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்" என்று கூறினார்.

அதுகுறித்து விளக்கிய அவர், "கடந்த மூன்று போட்டிகளிலும் நாங்கள் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து வருகிறோம். அதன் காரணமாக, அணியில் மாற்றங்கள் செய்வது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். எனினும், அவசரப்பட்டு எந்த முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம். அதேபோல எங்கள் திட்டங்களை முன்கூட்டியே வெளியிடுவதும் சரியாக இருக்காது. ஆனால், அணியின் மாற்றம் செய்வது குறித்து நிச்சயமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்றார்.

அதன்பின் ரிங்கு சிங் குறித்து பேசிய கோடக், "குடும்ப சூழ்நிலை காரணமாக வீடு திரும்பிய ரிங்கு ரிங், இன்று மாலை அணியுடன் இணைவார். அவரது தந்தை உடல்நிலை மோசமானதன் காரணமாக அவர் வீடு திரும்பினார்" என்று தெரிவித்தார். முன்னதாக தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவசரநிலை கருதி ரிங்கு சிங் நேற்றைய தினம் வீடு திரும்பினார்.

இதையும் படிங்க

இதனால் ஜிம்பாப்வே போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், தற்சமயம் அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்பதை பேட்டிங் பயிற்சியாளர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறிய ரிங்கு சிங், நாளைய போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன.