ETV Bharat / sports

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்: அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய அணி வரும் ஜூன் மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

ரோஹித் சர்மா - விராட் கோலி
ரோஹித் சர்மா - விராட் கோலி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 2, 2026 at 4:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து மார்ச் 4 ஆம் தேதி முதல் அரையிறுதி போட்டிகளும், மார்ச் 8 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்காக இந்த நான்கு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி ஜூன் 6 ஆம் தேதி நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகவும் இது அமையவுள்ளது. முன்னதாக இங்கு ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடிய நிலையில், தற்சமயம் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன. மேலும் இது இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

முன்னதாக டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணியானது தங்களது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவினாலும், அது அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகவும் அமைந்தது. இந்த நிலையில் தான் அந்த அணி மீண்டும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவிலும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள் லக்னோ மற்றும் சென்னையிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் எதிர் வரும் தொடரிலும் இந்திய அணி தங்களுடைய ஆதிக்கத்தை தொடரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அட்டவணை

  • ஜூன் 04 - டெஸ்ட் போட்டி - சண்டிகர்
  • ஜூன் 14 - முதல் ஒருநாள் போட்டி - தரம்சாலா
  • ஜூன் 17 - இரண்டாவது ஒருநாள் போட்டி - லக்னோ
  • ஜூன் 20 - மூன்றாவது ஒருநாள் போட்டி - சென்னை