ETV Bharat / sports

வாழ்வா, சாவா போராட்டம்: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா? ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்

ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதுடன், இமாலய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா vs ஜிம்பாப்வே
இந்தியா vs ஜிம்பாப்வே (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 1:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: டி20 உலக கோப்பை சூப்பர் 8 பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதவுள்ளன.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் ஏற்கெனவே குரூப் 2ல் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், நியூசிலாந்தும் ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மறுபக்கம் குரூப் 1ல் எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

அதன்படி, இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதுடன், இமாலய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நான்கு லீக் போட்டிகளிலும் அபார வெற்றியை பதிவு செய்து அசத்திய நிலையில், சூப்பர் 8-ன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பும் கடினமாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய சூழலில் இந்தியா களமிறங்குகிறது.

மேற்கொண்டு டாப் ஆர்டரை வலிமையாக்கும் வகையில் சஞ்சு சாம்சனும், மிடில் ஆர்டர் மற்றும் பவுலிங்கை மேம்படுத்தும் வகையில் அக்ஸர் படேலும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து மற்ற பேட்டர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி

சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணிக்கும் இது மிக முக்கிய போட்டியாகும். இந்த போட்டியில் அந்த அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும். இதன் காரணமாக அந்த அணியும் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

அணியின் பேட்டிங்கில் மருமணி, பிரையன் பென்னெட், ரியான் பார்ல், சிக்கந்த ரஸா ஆகியோர் வலுசேர்க்கின்றனர். மறுபக்கம் பந்துவீச்சை பொறுத்தவரையில் அந்த அணி பிளெஸிங் முசரபானியை மட்டுமே அதிகளவு சார்ந்திருப்பது பின்னடைவாக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி எவ்வாறு இந்திய அணியை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையிலும் 13 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இந்திய அணி 10 வெற்றிகளை பதிவு செய்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்து ஆதிக்கத்தை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் பவுலர்களுக்கு சாதகமான மைதானமாக திகழ்கிறது. இங்கு இதுவரை 16 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்த போட்டி இரவில் நடைபெறுவதன் காரணமாக, பனியின் தாக்கமும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

நேரலை தகவல்கள்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிங்க

உத்தேச லெவன்

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி , தியான் மேயர்ஸ், ரியான் பார்ல், சிக்கந்தர் ரஸா (கேப்டன்), டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், கிரேம் க்ரீமர், ரிச்சர்ட் ங்காரவா, பிளெஸிங் முசரபானி