இந்தூர் டி20 | சிக்ஸர் மழை பொழிந்த பேட்டர்கள்; இந்தியாவிடம் போராடி வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.


Published : October 11, 2026 at 10:53 PM IST
இந்தூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின், அபிஷேக் சர்மாவும் அவருடன் இணைந்த இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினர். மறுபக்கம் பவுண்டரிகளாக விளாசிய அபிஷேக் சர்மா, வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இஷான் கிஷன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா, 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் திலக் வர்மா 28 ரன்களையும், நிதிஷ் குமார் ரெட்டி 21 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
𝙎𝙪𝙢𝙥𝙩𝙪𝙤𝙪𝙨 𝙎𝙩𝙧𝙤𝙠𝙚𝙨 🔥 Abhishek Sharma looking unstoppable in Indore 🍿 Updates ▶️ https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ | @OfficialAbhi04 https://t.co/n93uV3DJcK
— BCCI (@BCCI) October 11, 2026
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப் மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த, மற்றொரு தொடக்க வீரரான கமில் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஷிம்ரான் ஹெட்மையர் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரோவ்மன் பாவெல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் கமில் பூரனும் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குயின்டன் சிம்ப்சனும் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறக் கடைசி 3 ஓவர்களில் 56 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் அதிரடி காட்ட முயன்ற கீமோ பால் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார். இறுதியாக அணியின் கடைசி நம்பிக்கையாகப் பார்க்கப்பட்ட ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் 32 ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி வாய்ப்பும் நழுவியது.
Stumps Rattled x 2⃣ ✌️ Arshdeep Singh 🤝 Naman Dhir strike TIMBER 🎯 Updates ▶️ https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ https://t.co/qtM2RxaCyp
— BCCI (@BCCI) October 11, 2026
| இதையும் படிங்க |
தொட்ர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், நமன் திர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

