ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: ஹர்திக் பாண்டியா அதிரடி ஃபினிஷிங்; ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஹர்திக் பாண்டியா அதிரடி அரைசதம்
ஹர்திக் பாண்டியா அதிரடி அரைசதம் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 11:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக தொடங்கிய சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியை தொடர்ந்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்

இதில் அபிஷேக் சர்மா 26 பந்துகளில் தனது முதல் டி20 உலகக் கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 55 ரன்களை சேர்த்த கையோடு அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவும் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 33 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா - ஹர்திக் பாண்டியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபினிஷிங்கை கொடுத்தனர்.

இதில் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 50 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 256 ரன்களை குவித்தது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 254 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், இந்திய அணி அதனை முறியடித்துள்ளது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென்னட் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் மருமணி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தியான் மேயர்ஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பென்னட் - ரஸா இணை ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.

இதில் பென்னட் அரைசதம் கடந்த நிலையில், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 72 ரன்களை எட்டியது. அதன்பின் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் ரஸா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரியான் பர்ல், டோனி மியங்கா, முசெகிவா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த பிரையன் பென்னட் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 97 ரன்களை சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையும் படிங்க

இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.