மலேசிய ஓபன் 2026: அரையிறுதி சுற்றுடன் வெளியேறினார் பி.வி.சிந்து
காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, இது போன்ற ஒரு ஆட்டத்துடன் இந்த சீசனை தொடங்குவது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூறியுள்ளார்.

Published : January 10, 2026 at 1:33 PM IST
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் வாங் ஷியை எதிர்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில், இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை வென்றனர்.
இருப்பினும் முதல் செட்டில் சிறப்பாக செயல்பட்ட வாங் ஷி 21-16 என்ற கணக்கில் அதனை கைப்பற்றினார். பின்னர் இரண்டாம் செட் ஆட்டத்தில் பி.வி. சிந்து கடுமையாக போராடி கம்பேக் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால், இரண்டாம் செட் ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய வாங் ஷி 21-15 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றி, பி.வி. சிந்துவிற்கு அதிர்ச்சி கொடித்தார்.
Instant reactions! 🥶
— BWF (@bwfmedia) January 10, 2026
Follow live action: https://t.co/TjoFnU4PnB@HSBC_Sport
#BWFWorldTour #MalaysiaOpen2026 pic.twitter.com/Ihjsh3sW7T
இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் வாங் ஷீ 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்துவை வீழ்த்தி நடப்பு மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதே சமயம் இந்த தொடரில் வெற்றி பெற்று கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதி சுற்றுடன் வெளியேறி, மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
இந்த தோல்வி குறித்து பேசிய பி.வி.சிந்து, "அரையிறுதி என்பதால், இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும் என்பதுடன், புள்ளிகளை வெல்வதும் மிகவும் கடினம் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் இதில் வெற்றி பெற நான் கடினமாக முயற்சி செய்தேன். இறுதியில் அதனை என்னால் அடைய முடியவில்லை.
மேலும் இந்த தொடர் எனக்கு ஒரு நல்ல போட்டியாக அமைந்தது. இப்போது நான் ஓய்வெடுத்து, இந்தியா ஓபன் போட்டிக்குத் தயாராவது முக்கியம். குறிப்பாக, காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, இது போன்ற ஒரு ஆட்டத்துடன் இந்த சீசனை தொடங்குவது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Semifinals encounter as Pusarla V. Sindhu 🇮🇳 takes on Wang Zhi Yi 🇨🇳.#BWFWorldTour #MalaysiaOpen2026 pic.twitter.com/efRoCty44Y
— BWF (@bwfmedia) January 10, 2026
இதையும் படிங்க |
முன்னதாக மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென், ஆயுஷ் ஷேட்டி ஆகியோரும், இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஆகியோரும் பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்த நிலையில், தற்போது பி.வி.சிந்துவும் அரையிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

