ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: வலுவான இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்; சாதிக்குமா இந்திய அணி?

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : March 1, 2026 at 8:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் இல்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் பதிலாக அகீல் ஹொசைன் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களை சேர்த்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ரோஸ்டன் சேஸுடன் இணைந்த ஷிம்ரான் ஹெட்மையர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 40 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.

மேற்கொண்டு களமிறங்கிய ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்டும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த ரோவ்மன் பாவெல் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோவ்மன் பாவெல் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.

இதையும் படிங்க

பிளெயிங் லெவன்

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப்(கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஃபோர்ட், அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, ஷமார் ஜோசப்.