ETV Bharat / sports

சஞ்சு சாம்சன் உலகத் தர வீரர் - கௌதம் கம்பீர் புகழாரம்

அணியின் தேவைக்கேற்ப விளையாடி, தனது உண்மையான திறனை சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தியதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 2, 2026 at 1:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது.

இதில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 40 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 37 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.

ஆனாலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 97 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கும் முன்னேறியது. இதில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றர்.

இந்நிலையில் போட்டி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "சஞ்சு சாம்சன் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் இன்று அணிக்கு தேவைப்படும் நேரத்தில், தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் இதில் இரண்டு போட்டிகள் உள்ளன, அதிலும் அவர் இதனை தொடர வேண்டும் என்று நம்புகிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சஞ்சு சாம்சன் ஒருபோதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கவில்லை. அவர் மிகவும் சாதாரணமாக கிரிக்கெட் ஷாட்டுகளை மட்டுமே விளையாடி, அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதனை நான் இதுவரை பார்த்தது கிடையாது. அது தான் அவரிடம் உள்ள தனி திறமை என்று நினைக்கிறேன். நீங்கள் காட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் விளையாடும் ஷாட்டுகள் மூலம் தெரியும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர். இன்று அவர் தனது உண்மையான திறனைக் காட்டினார்" என்றார்.

தொடர்ந்து, "சஞ்சுவிடம் உள்ள திறமை நாம் அறிந்த ஒன்று தான். அவர் இதற்கு முன் மூன்று டி20 சதங்களை அடித்துள்ளார். இருப்பினும் சில நேரங்களில் ஒரு இடைவெளி கொடுத்து அந்த அழுத்தமான சூழ்நிலையிலிருந்து அவரை மீட்டெடுப்பது முக்கியம். இந்த உலகக் கோப்பை தொடரில் எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், அவர் அதனை சரியாக செய்வார் என்ற நம்பிக்கை எப்போது உள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சஞ்சு சாம்சனின் 97 ரன்களை போலவே ஷிவம் தூபே இறுதியில் அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும் முக்கியமானது. ஏனெனில் அவர் அப்போது அந்த பவுண்டரிகளை அடிக்காமல் இருந்திருந்தால், நாம் இப்போது அந்த 97 ரன்கள் குறித்து பேசி இருக்க மாட்டோம். என்னை பொறுத்தவரையில் பெரிய ஸ்கோரை தலைப்புச் செய்தியில் இடம் பிடிக்க உதவும். ஆனால் சிறிய பங்களிப்பு ஆட்டத்தில் வெற்றிபெற உதவுகிறது. இது ஒரு குழு விளையாட்டாகும், இது எப்போதும் ஒரு குழு விளையாட்டாகவே இருக்கும்" என்று கூறினார்.

இதையும் படிங்க

தற்சமயம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, அடுத்ததாக மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.