ETV Bharat / sports

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் | தொடரில் முன்னிலை வகிக்கப் போவது யார்? இன்று 3ஆவது டி20 போட்டி!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : October 11, 2026 at 2:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

இந்தூர்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சம பலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணி

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, பேட்டிங்கில் வலுவான அணியாகக் காணப்படுகிறது. குறிப்பாக சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு பெரும் நெருக்கடியை வழங்கி வருகின்றனர். இது இந்திய அணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கடந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி வழங்கியது அணிக்கு பலவீனமாக மாறியுள்ளது. அறிமுக வீரர் நமன் தீர், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் ஆகியோரது வேகமும், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஸர் படேலின் சுழலும் இன்றைய போட்டியில் கம்பேக் கொடுத்து, வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களின் அதிரடிக்கு முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி

மறுபுறம், ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த போட்டியில் 250 ரன்கள் என்ற இமாலய இலக்கையும் அசால்ட்டாக சேஸ் செய்து சாதனை படைத்த உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. குறிப்பாக கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு பெரும் பலமாக உள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தவரையிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்களை வாரி வழங்கியது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னணி வீரர்களான அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்த தவறி வருகின்றனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம் ஒரு போட்டியின் முடிவு எட்டப்படவில்லை.

நேரலை விவரம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ-ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இந்த போட்டியைக் காண முடியும்.

இதையும் படிங்க

உத்தேச லெவன்

இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, நமன் தீர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: கமில் பூரன், ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, அகீல் ஹொசைன், ஷமார் ஸ்பிரிங்கர், ஷமார் ஜோசப்.