இந்தியா vs பாகிஸ்தான்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் 2026
2026ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ள தொடர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Published : January 2, 2026 at 5:17 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் போட்டிகளில் ஒன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் காரணங்களால், இவ்விரு அணிகள் மோதும் போட்டியின் மீது எப்போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்தே காணப்படும். அதிலும் குறிப்பாக உலகக் கோப்பை போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
ஏனெனில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே விற்றுத் தீர்ந்து விடும். அந்த அளவிற்கு இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மீது ரசிகர்கள் ஆர்வம் வைத்துள்ளனர். இதற்கு மற்றொரு காரணம் என்னவெனில், இவ்விரு அணிகளும் 2013ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவிதமான இருதரப்பு தொடர்களிலும் மோதுவதை தவிர்த்து வருகின்றன.
இதனால் இவ்விரு அணிகளும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருவதால், ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உள்ளது. இதனால் தான் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக கடந்த ஆசிய கோப்பை தொடர் அமைந்திருந்தது.
அந்த தொடரில் இரு அணி வீரர்களும் கை குலுக்க மறுத்த சம்பவத்திற்கு பிறகு, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளின் எதிர்பார்ப்பும் எகிறிவுள்ளது. அந்த வகையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை எதிர் நோக்கும் ரசிகர்களுக்கு இந்த 2026ஆம் ஆண்டு ஒரு ஜாக்பாட்டாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டில் யு19 உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, மகளிர் உலகக் கோப்பை என வரிசையாக உள்ளன. அப்படி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ள தொடர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை
இந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இந்த தொடரில் இவ்விரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்டர்19 உலகக் கோப்பை
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, ஐசிசி அண்டர்19 உலகக் கோப்பை தொடரனாது எதிர்வரும் ஜனவரி 15 முதல் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெவ்வேறு குழுக்களில் இடம் பிடித்துள்ளதால், லீக் போட்டிகளில் மோதும் வாய்ப்பு இல்லை.
இருப்பினும் இரு அணிகளும் நாக் அவுட் சுற்றில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர்த்து, இந்த தொடரிலும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் உள்ளது. ஏற்கெனவே நடந்து முடிந்த யு19 ஆசிய கோப்பை தொடரிலும் இவ்விரு அணிகளிடையேயான போட்டி கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் டி20 உலகக் கோப்பை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் 12 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பிடித்துள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான லீக் போட்டி ஜூன் 14ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர் மோதல்கள்
ஆடவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரையில் 16 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 13 முறையும், பாகிஸ்தான் அணி 3 முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஒட்டு மொத்தமாக இவ்விரு அணிகளும் 211 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் இந்தியா 80 முறையும், பாகிஸ்தான் 88 முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 43 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் இந்திய மகளிர் அணி 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் மகளிர் அணி 3 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக இவ்விரு அணிகளுக்கும் இடையே 27 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் இந்தியா 24 போட்டிகளிலும், பாகிஸ்தான் மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இதையும் படிங்க |
அண்டர்19 கிரிக்கெட்டை பொறுத்த வரை இவ்விரு அணிகளும் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அண்டர்19 அணி 20 போட்டிகளிலும், பாகிஸ்தான் அண்டர்19 அணி 11 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற யு19 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

