ETV Bharat / sports

ஹாக்கி உலகக் கோப்பை 2026 | இறுதிவரை நீடித்த பரபரப்பு... பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியாவை வீழ்த்தியது பெல்ஜியம்!

பெல்ஜியத்திற்கு எதிரான இந்தத் தோல்வியின் காரணமாக, இந்திய அணி நடப்பு உலகக் கோப்பைத் தொடரை 8ஆவது இடத்துடன் நிறைவு செய்துள்ளது.

ஹாக்கி உலகக் கோப்பை 2026
ஹாக்கி உலகக் கோப்பை 2026 (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 29, 2026 at 12:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் 7-8 இடங்களுக்கான ஆட்டத்தில், இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 3-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது.

பெல்ஜியத்திலும் நெதர்லாந்திலும் நடைபெற்று வரும் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2026 தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 7 மற்றும் 8ஆம் இடங்களுக்கான வகைப்படுத்தும் ஆட்டத்தில், இந்திய மற்றும் பெல்ஜிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே, இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் நைன் ஒரு அபாரமான ஃபீல்டு கோல் அடித்து, இந்தியாவை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார். அதேசமயம், மறுபக்கம் பெல்ஜியம் அணியும் தங்களது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் பலனாக, ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ரோமன் டுவெகோட்டும், 23ஆவது நிமிடத்தில் யூகோ லாபோசெரும் அடுத்தடுத்து கோலடித்து பதிலடி கொடுத்தனர்.

இதன் காரணமாக, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனைச் சரியாகப் பயன்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அபாரமாக கோலடித்து, போட்டியை 2-2 என்ற கணக்கில் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

அதேசமயம், மறுபக்கம் பெல்ஜியம் அணியும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டது. ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் அந்த அணியின் டி நிக்கோலஸ் ஒரு கோலடித்து பெல்ஜியத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தினார். இதனால் பெல்ஜியம் அணி வெற்றியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் முடிய கடைசி 20 வினாடிகளே இருந்தபோது இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் பொன்னான வாய்ப்பில், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோலைப் பதிவு செய்து அசத்தினார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அவர் அடித்த 8ஆவது கோல் இதுவாகும். ஹர்மன்பிரீத்தின் இந்த கடைசி நிமிட கோல் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட ஆட்டநேர முடிவில் இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

அதன்பின் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க, பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் அணியின் அனுபவமிக்க கோல்கீப்பர் வின்சென்ட் வனாஷ், இந்திய வீரர்களின் முதலிரண்டு கோலடிக்கும் முயற்சிகளையும் அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். அதன்படி, இந்தியாவின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் சுக்ஜீத் சிங் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த ஷூட்-அவுட் வாய்ப்புகளைத் தவறவிட்டு ஏமாற்றமளித்தனர். மறுபுறம், பெல்ஜியம் அணியினர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கோல்களாக மாற்றினர்.

இதையும் படிக்கவும்

இறுதியில் பெல்ஜியம் அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், இத்தொடரில் 7ஆவது இடத்தையும் பிடித்தது. மறுபக்கம், இந்த அதிர்ச்சித் தோல்வியின் காரணமாக இந்திய ஆடவர் அணி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 8ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, தனது உலகக் கோப்பை பயணத்தை நிறைவு செய்துள்ளது.