யுஎஸ் ஓபன் 2026 | ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி டென்னிஸ் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மரியானோ நவோன்!
இந்த அதிர்ச்சித் தோல்வியின் காரணமாக செர்பியாவின் நோவக் ஜோகோவிச், யுஎஸ் ஓபன் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.


Published : August 31, 2026 at 10:48 AM IST
ஹைதராபாத்: டென்னிஸ் உலகின் ஜாம்பவானும், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், யுஎஸ் ஓபன் 2026 தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.
சர்வதேச டென்னிஸ் உலகின் மிக உயரிய மற்றும் புகழ்பெற்ற நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில், ஆண்டின் இறுதியாக நடைபெறும் மிக முக்கியத் தொடர் அமெரிக்க ஓபன் ஆகும். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான யுஎஸ் ஓபன் தொடர் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், டென்னிஸ் ஜாம்பவான் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மரியானோ நவோனை எதிர்கொண்டார்.
Mariano Navone puts himself in the history books 📘 pic.twitter.com/3X6kSoydMV
— US Open Tennis (@usopen) August 31, 2026
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், தொடக்கம் முதலே இரு வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் அதிரடியாக விளையாடினர். இதனால் முதல் செட்டிலேயே யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு அதிகரித்தது. இறுதியில் அபாரமாக விளையாடிய மரியானோ நவோன் 7-6 (5) என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், அதன் பின்னர் ஜோகோவிச், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆட்டத்திற்குள் பலமான கம்பேக் கொடுத்தார்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கில் போராடி வென்ற ஜோகோவிச், மூன்றாவது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி ஆட்டத்தில் முன்னிலை பெற்றார். இதனால் ஜோகோவிச் எளிதாக வெற்றியைப் பதிவு செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் 39 வயதான ஜோகோவிச்சிற்கு கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மைதானத்திலேயே அவர் மருத்துவ உதவியைப் பெற்ற போதிலும், அவரால் முழுத் திறனுடன் விளையாட இயலவில்லை.
Mariano's moment 👇 pic.twitter.com/1EIuZ9v8u0
— US Open Tennis (@usopen) August 31, 2026
இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நவோன், 6-2, 6-1 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் சுமார் 4 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்த இந்த மாரத்தான் போட்டியில், மரியானோ நவோன் 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மறுபக்கம், இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாம்பவான் ஜோகோவிச், இந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் யுஎஸ் ஓபன் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளித்தார்.
இருப்பினும், இந்த போட்டி முடிந்தவுடன், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று ஜோகோவிச்சிற்கு கைதட்டி தங்களின் ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்தத் தோல்வியாலும், கடுமையான உடல் வலியாலும் மிகுந்த ஏமாற்றமடைந்த ஜோகோவிச், ரசிகர்களின் இந்த அன்பைக் கண்டு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த உருக்கமான காட்சி சமூக வலைத்தளங்களில் உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
A well-deserved ovation 👏
— US Open Tennis (@usopen) August 31, 2026
See you again soon, @DjokerNole. pic.twitter.com/1jRBbC77Ee
இதையும் படிங்க: |
சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நோவக் ஜோகோவிச், இந்த யுஎஸ் ஓபன் தொடரிலும் வென்று, தனது 25ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் தனிநபர் சாதனையைப் புதுப்பிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பாராத முதல் சுற்றுத் தோல்வி அவரது 25ஆவது கிராண்ட்ஸ்லாம் கனவைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டுள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

