ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை படுதோல்வி - ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகிறதா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்க்க மிக முக்கியக் காரணமாக இருந்த ஆஸ்திரேலியா, தற்போது அதே தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 25, 2026 at 5:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028ஆம் ஆண்டு ஜூலை 14 முதல் ஜூலை 28ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக 1990ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம் பிடித்திருந்தது. அதன்பின் நேர கட்டுப்பாடுகள் காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது.

இந்நிலையில் தற்மயம் ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதன் காரணமாக, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இருப்பினும் அதில் 6 அணிகள் மட்டும் பங்கேற்க உள்ளன.அதன் படி, தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் அமெரிக்கா, விளையாட உள்ளது. கண்டங்கள் அடிப்படையிலான தரவரிசையின் படி, மீதமுள்ள 4 அணிகள் தேர்வாகும். 6வது அணி, தகுதிச்சுற்றில் முடிவில் தெரியவரும்.

அந்தவகையில் ஓசியானியா கண்டத்திலிருந்து ஆஸ்திரேலிய அணி ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததன் காரணமாக லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இது தற்போது ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் கனவுக்கு பெரும் தடையாக வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், அந்த அணி ஐசிசி தரவரிசையில் டாப் 4 இடத்தை பிடிக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஓசியானியா கண்டத்திலிருந்து நியூசிலாந்து அணி ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை தட்டிச்செல்லும்.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி தகுதிச்சுற்றின் அடிப்படையில் மட்டுமே ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற முடியும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியானது ஐசிசி நடத்தும் உலகளாவிய தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற வேண்டும். இதில் மற்ற கண்டங்களில் நேரடி வாய்ப்பை இழந்த வலிமையான அணிகளும் பங்கேற்கும் என்பதால், அது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் கடினமான பலப்பரீட்சையாக இருக்கும்.

இதையும் படிங்க

அது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தலாம். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று முன்மொழிந்த அணிகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அப்படி இருக்கும் நிலையில், தற்சமயம் அவர்களே ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.