மகளிர் கிரிக்கெட்: அலிசா ஹீலி சாதனை சதம்; இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.


Published : March 1, 2026 at 5:34 PM IST
ஹாபர்ட்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைபப்ற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மூன்றாவது போட்டி இன்று ஹாபர்டில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்ச்ஃபீல்ட் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹீலியுடன் ஜோடி சேர்ந்த ஜார்ஜியா வோல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
An Alyssa Healy century in her final ODI!
— 7Cricket (@7Cricket) March 1, 2026
And no one is prouder than Mitch Starc in the commentary box 😊#AUSvIND pic.twitter.com/Ey27zCbPt2
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களை பதிவு செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். அதன்பின் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 62 ரன்களை சேர்த்த கையோடு ஜார்ஜியா வோல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பெத் மூனியும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய அலீசா ஹீலி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 8ஆவது சதத்தை பதிவு செய்தார். மேற்கொண்டு தொடர்ந்து விளையாடிய ஹீலி 27 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 158 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரையிலும் ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்த பெத் மூனியும் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என சதம் விளாசி மிரட்டினார்.
✅ 400 up for first time in women's ODIs in Australia
— cricket.com.au (@cricketcomau) March 1, 2026
✅ Sixth ODI ton
Beth Mooney did both in consecutive balls!#PlayOfTheDay @nrmainsurance #AUSvIND pic.twitter.com/4ToviqZXST
இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சாரணி, ஸ்நே ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
மேற்கொண்டு தொடக்க வீராங்கனை பிரதிகா ரவால் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 14 ரன்களிலும், தீப்தி சர்மா 29 ரன்களிலும், ரிச்சா கோஷ் 18 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இறுதியில் ஸ்நே ரானா 44 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் இந்திய மகளிர் அணி 45.1 ஓவர்களில் 224 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
An ODI series sweep for Australia, who send Alyssa Healy out on a high #AUSvIND
— cricket.com.au (@cricketcomau) March 1, 2026
Full wrap from Hobart: https://t.co/wRo7Vuh6a3 pic.twitter.com/Exp8PcQOM5
இதையும் படிங்க |
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய அலீசா ஹீலி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த அலீசா ஹீலி, தனது கடைசி சர்வதேச போட்டியில் சதம் விளாசியதுடன் ஆட்ட நாயகி விருதையும் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் தனது ஓய்வுப் போட்டியில் சதம் விளாசிய உலகின் இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

