ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: சதம் விளாசி இங்கிலாந்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற புரூக்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 50 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

சதம் விளாசி இங்கிலாந்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற புரூக்
சதம் விளாசி இங்கிலாந்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற புரூக் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 24, 2026 at 10:44 PM IST

2 Min Read
Choose ETV Bharat

பல்லகலே: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் - சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயுப் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

மேற்கொண்டு களமிறங்கிய பாபர் ஆசாமும் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சாஹிப்சாதா ஃபர்ஹானும் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 63 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஃபகர் ஜமான் 25 ரன்களையும், ஷதாப் கான் 23 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லியாம் டௌசன் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

மேற்கொண்டு ஜோஸ் பட்லர் 2 ரன்களிலும், ஜேக்கப் பெத்தெல் 8 ரன்களிலும், டாம் பாண்டன் 2 ரன்களிலும், சாம் கரண் 16 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடிசேர்ந்த கேப்டன் ஹாரி புரூக் மற்றும் வில் ஜேக்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜேக்ஸ் ஸ்டிரைக்கை ரோட்டேட் செய்ய, மறுபக்கம் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஹாரி புரூக் 50 பந்துகளில் தனது சதத்தையும் பதிவு செய்து மிரட்டியதுடன், அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். அதன்பின் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 100 ரன்களை சேர்த்த கையோடு ஹாரி புரூக் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் வில் ஜேக்ஸும் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதையும் படிங்க

இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதம் விளாசி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ஹாரி புரூக் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.