உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு!
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் நடத்தும் பிக்கில் பால் போட்டிகளை தொடங்கிவைக்கவுள்ளார்.

Published : November 13, 2025 at 1:54 PM IST
சென்னை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் முன்னேறி இருந்தன.
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
மகளிர் உலகக் கோப்பையின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக நிகழ்வில் பங்கேற்றார். அங்கு அவருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சனை சந்தித்துப் பேசினார்.

இதனையடுத்து, தனியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படவுள்ள பிக்கில் பால் (Pickle Ball) போட்டியையும் ஹர்மன்ப்ரீத் கவுர் தொடங்கி வைக்கவுள்ளார். அந்நிகழ்வின் அவர் பல்கலைக்கழக வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடவும் உள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர்
இந்திய அணிக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமான ஹர்மப்ரீத் கவுர், இதுவரையில் 6 டெஸ்ட் போட்டிகள், 161 ஒருநாள் போட்டிகள் மற்றும் 182 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ரன்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்கள், 22 அரைசதங்களுடன் 4,409 ரன்களையும் குவித்துள்ளார்.
இதையும் படிங்க: |
இது தவிர டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம், 22 அரை சதங்கள் உள்பட 3,654 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் வழிநடத்தி இரண்டு கோப்பைகளை வென்று கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

