ETV Bharat / sports

உலக செஸ் தரவரிசையில் மீண்டும் 10-வது இடத்திற்கு முன்னேறினார் குகேஷ்!

ரஷ்யன் செஸ் கிரௌன் போட்டியானது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதை அடுத்து, அந்த தொடரில் பங்கேற்ற வீரர்களின் ரேட்டிங் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குகேஷ் தொம்மராஜு
குகேஷ் தொம்மராஜு (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 3, 2026 at 7:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு சரி செய்ததை அடுத்து, இந்திய வீரர் குகேஷ் தொம்மராஜு மீண்டும் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீரரும், உலக சேஸ் சாம்பியனுமான குகேஷ் தொம்மராஜு தற்போது செக் குடியரசில் நடைபெற்று வரும் பிராக் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஆனால் இந்த தொடரில் அவர் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படாததுடன், அடுத்தடுத்து தோல்விகளையும் சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஏனெனில் இந்த தொடரில் அவர் இதுவரை 5 சுற்றுகளில் விளையாடிய நிலையில், அதில் இரண்டு தோல்விகள் மற்றும் மூன்று போட்டிகளில் டிராவுடன் முடித்துள்ளார். இதன் காரணமாக அவரது ரேட்டிங் புள்ளிகள் சரிவை சந்தித்து வருகின்றன. முன்னதாக நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரிலும் குகேஷ் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக செயல்படாததன் காரணமாக, ரேட்டிங் புள்ளிகளில் சரிவை சந்தித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த தரவரிசையில் இந்திய வீரர் குகேஷ் 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே சமயம் ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் திடீரென 10ஆவது இடத்தைப் பிடித்தது பலரையும ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் முன்னதாக அவர் உக்ரைனுடனான ரஷ்யா போருக்கு ஆதரவு தெரிவித்ததன் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் இடைக்கால தடையை பெற்றிருந்தார்.

ஆறு மாதங்கள் நீடித்த இந்த தடைக்கு பின் அவர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதன்பின் அவர் நீண்ட காலமாக எந்தவொரு சர்வதேச செஸ் தொடரிலும் பங்கேற்காமல் இருந்ததை அடுத்து, செர்ஜி கர்ஜாக்கினை 'ஆக்டிவ் வீரர்' பட்டியலில் இருந்தும் சர்வதேச செஸ் கூட்டமைப்பானது நீக்கம் செய்திருந்தது.

இந்த சூழலில் தான் மார்ச் 1ஆம் தேதி வெளியான சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசையில் செர்ஜி கர்ஜாகின், திடீரென 10ஆவது இடத்திற்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தரவரிசை குறித்த விசாரணையில் ஈடப்பட்டது. அதன் முடிவில் இந்த தரவரிசை பட்டியலில் சில குளறுபடிகள் நடந்துள்ளதை கூட்டமைப்பு கண்டறிந்துள்ளது.

அதன்படி, செர்ஜி கர்ஜாகின் தனது தரவரிசையைத் தக்கவைப்பதற்காக உள்நாட்டில் நடைபெற்ற ரஷ்யன் செஸ் கிரௌன் தொடரில் பங்கேற்று, அதன் மூலம் ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ளார். ஆனால் இந்த ரஷ்யன் செஸ் கிரௌன் தொடரானது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏனெனில் விதி எண். 0.2.1-ன் படி எந்தவொரு சர்வதேசப் போட்டியும் தொடங்குவதற்கு 30 நாள்களுக்கு முன்பே சர்வதேச செஸ் கூட்டமைப்பிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் ரஷ்யன் செஸ் கிரௌன் போட்டிகள் அவசர அவசரமாக நடத்தப்பட்டு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதை சர்வதேச செஸ் கூட்டமைப்பு கண்டுபிடித்துள்ளது.

இந்த விதிமீறல் காரணமாக, செர்ஜி கர்ஜாகின் விளையாடிய போட்டியின் முடிவுகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு ரத்து செய்ததுடன், அவரை மீண்டும் 'இன்னாக்டிவ் பிளேயர்’ பட்டியலில் சேர்த்துள்ளது. இதன் காரணமாக தரவரிசை பட்டியலிலிருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்திய வீரர் குகேஷ், 2,748 புள்ளிகளுடன் மீண்டும் அதிகாரப்பூர்வமாக 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க

இதன் மூலம் உலக செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை குகேஷ் தக்க வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அர்ஜுன் எரிகைசி 11 ஆவது இடத்திலும், பிரக்ஞானந்தா 13ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேசமயம் நார்வே நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சன் 2,840 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.