ETV Bharat / sports

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி: சாம்பியன் மகுடம் யாருக்கு? ஆர்சிபி vs குஜராத் இன்று மோதல்!

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்று சமநிலை வகிக்கின்றன.

ஆர்சிபி vs குஜராத்
ஆர்சிபி vs குஜராத் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : May 31, 2026 at 1:16 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மொதிய முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் விளையாடவுள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியதுடன், முதல் அணியாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதுதவிர ஏற்கெனவே நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் உள்ள ஆர்சிபி அணி, இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக தங்களது இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

அணியின் பேட்டிங்கில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் பில் சால்ட், தேவ்தத் படிகல், வெங்கடேஷ் ஐயர், டிம் டேவிட் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மறுபக்கம் அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதுடன், ரன்களையும் கட்டுப்படுத்தி வருவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ்
மறுபுறம், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், முதல் குவாலிஃபையரில் படுதோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் ராஜஸ்தானுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி, அதில் வெற்றிபெற்று தற்சமயம் இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்துள்ளது. ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு கோப்பையை வென்ற குஜராத் அணி, தற்சமயம் தங்களது இரண்டாவது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்சன் அபார ஃபார்மை தொடரும் நிலையில், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பேட்டிங் துறையை வலிமைப் பெற செய்துள்ளது. அதேசமயம் அணியின் பவுலிங்கில் முகமது சிராஜ், காகிசோ ரபாடா, பிரஷித் கிருஷ்ணா, ரஷித் கான் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், கோப்பையையும் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 5 முறையும், குஜராத் அணி 4 முறையும் வெற்றியை பதிவு செய்து சமனிலையில் உள்ளன. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்று சமநிலை வகிக்கின்றன.

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம்
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் பேட்டர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதும் அல்லது சேஸிங் செய்வதும் வெற்றிக்கான வாய்ப்பை சமமாகவே வழங்குகிறது. இருப்பினும், இரவு நேரங்களில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பவுலிங் செய்வது வெற்றிக்கு கூடுதல் சாதகத்தை வழங்கலாம்.

நேரலை தகவல்கள்
ஐபிஎல் தொடரின் மற்றப்போட்டிகளை போலவே, பிளேஆஃப் போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டிகளை காண முடியும். பிளேஆஃப் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு இரவு 7 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிக்கவும்

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தார். (இம்பேக்ட் வீரர்-ரொமாரியோ ஷெப்ஃபர்ட்)

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், ஷுப்மன் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.(இம்பேக்ட் வீரர்-ராகுல் திவேத்தியா)