அகமதாபாத் படுதோல்விக்கு சேப்பாக்கில் பதிலடி கொடுக்குமா இந்தியா?
டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி ஜிம்பாப்வேவுடன் வாழ்வா-சாவா போராட்டத்தை எதிர்கொள்ளவுள்ளது.


Published : February 24, 2026 at 9:51 PM IST
சென்னை: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 ஆட்டம் நாளை மறுநாள் சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ள இந்திய அணியானது, தங்களுடைய அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இந்த போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. அதேசமயம் ஃபார்மில் இல்லாத அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் பதில் பிளேயிங் லெவனில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா? இல்லை கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே விளையாடுவார்களா? உள்ளிட்ட கேள்விகளும் அதிகரித்து வருகின்றன.
அணித்தேர்வு
அகமதாபாத் தோல்விக்கு பிறகு அதிகம் விவாதிக்கப்பட்ட விசயங்கள் இரண்டு தான். ஒன்று டாப் ஆர்டரில் மாற்றம் இல்லாதது ஏன்? மற்றொன்று அக்ஸர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தது ஏன்? என்பது தான். ஏனெனில் கடந்த போட்டியில் இவை இரண்டும் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பவர்பிளேவில் பந்து வீசும் திறம் இருந்தும் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்ததது, மிடில் ஓவர்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.
அதனால் இந்த போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற இருப்பதால், ஆடகளம் மெதுவாகவும், பவுன்ஸ் குறைவாகவும் இருக்கும். அதனால் இந்த போட்டியில் அக்ஸர் படேலை தேர்வு செய்வது அணிக்கு பெரும் பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவரது இடது கை பந்துவீச்சு, ரன்களை கட்டுப்படுத்தும் திறன், லைன் மற்றும் லெந்த் என அனைத்தும் இந்திய அணிக்கு மிக்கப்பெரிய உதவியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்படும் பிளேயிங் லெவன்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் டாப் ஆர்டரில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் அபிஷேக் சர்மா அல்லது திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. மேற்கொண்டு ஃபார்மில் இல்லாத ரிங்கு சிங்கிற்கு பதிலாக அக்ஸர் படேலும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவும் இடம் பிடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் விளையாடும் போது அது இந்திய அணியின் வலதுகை பேட்டரை சேர்க்கும். இதன் மூலம் தொடக்க ஓவராக இருந்தாலும் சரி, அல்லது பவர் பிளே ஓவர்களாக இருந்தாலும், அங்கு எதிரணி ஸ்பின்னர்களை பயன்படுத்தும் முடிவை மாற்றலாம். மேற்கொண்டு கேப்டன் சூர்யகுமார், அக்ஸர் படேல் மிடில் ஓவர்களில் விளையாடினால், இறுதியில் ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே ஆகியோர் ஃபினிஷிங்கை பொறுப்பை ஏற்பார்கள்.
அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் புதிய பந்தை கையாள்வதுடன், டெத் ஓவர்களை கவனித்து கொள்வார்கள். அதன்படி பார்த்தால் மிடி ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோருடன் ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்தலாம். இதில் ஒருவர் ரன்களை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் அதனை சரி செய்ய இயலும்.
உத்தேச பிளேயிங் லெவன்: இஷான் கிஷன், அபிஷேக் சர்மா/சஞ்சு சாம்சன்/திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், அக்ஸர் படேல், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
அணியின் பலம்
இந்த பிளேயிங் லெவன் படி பார்த்தால், வேகம் குறைந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஸர் ஆகியோர் இந்திய அணியின் பலமாக பார்க்கப்படுகின்றனர். இதில் குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தும் பவுலராகவும், வருண் எதிரணியை தடுமாற செய்யும் பவுலராகவும், அக்ஸர் படேல் ரன்களை கட்டுபடுத்த கூடிய பவுலாராகவும் செயல்படுவார்கள். மேற்கொண்டு பும்ரா இறுதிக்கட்டத்திலும், அர்ஷ்தீப் தொடக்கம் மற்றும் இறுதிகட்ட ஓவர்களிலும் அணியின் பக்கபலமாக செயல்படுவார்கள்.
அணியின் பலவீனம்
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடச்சியாக ரன்களை சேர்க்க தவறுவது பெரும் பலவீனமாக இருந்து வருகிறது. அதிலும் சென்னை மைதானம் மெதுவாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களால் ரன்களை சேர்க்க முடியாமல் போகலாம். அதனால் மிடில் ஆர்டர் வீரர்கள் கூடுதல் கவனத்துடன் போட்டியை அனுக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வேவின் எச்சரிக்கை
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற மனநிலையுடன் களமிறங்கும். அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸிடம் அடைந்த படுதோல்விக்கு பிறகு அணியின் அரையிறுதி வாய்ப்பும் ஏறத்தாழ மங்கியுள்ளதால், நிச்சயம் அந்த அணி ஆறுதல் வெற்றிகளைப் பதிவு செய்யும் நோக்கி போட்டியை எதிர்கொள்ளும். அதனால் இந்த போட்டியில் இந்த அணி கூடுதல் கவனத்துடன் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

