ETV Bharat / sports

விம்பிள்டன் 2026: டெயிலர் ஃப்ரீட்ஸ், ஜாஸ்மின் பௌலினி காலிறுதிக்கு முன்னேற்றம்; டிமிட்ரோவ், மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி!

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நட்சத்திர விரர்கள் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.

ஆர்தர் ஃபெரி
ஆர்தர் ஃபெரி (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 7, 2026 at 11:22 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் 4-வது சுற்று ஆட்டங்களில் முன்னணி நட்சத்திரங்களான டெயிலர் ஃப்ரீட்ஸ் மற்றும் ஜாஸ்மின் பௌலினி ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

லண்டனில் விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் தற்போதைய சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், உலகின் 6ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெயிலர் ஃப்ரீட்ஸ், 10ஆம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஃப்ரீட்ஸ் அபார வெற்றி, டிமிட்ரோவ் ஏமாற்றம்

இதன் காரணமாக, டெய்லர் ஃப்ரீட்ஸ் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கடுமையான போராட்டத்திற்குப் பின் வென்றார். ஆனால், அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்திய டெய்லர் ஃப்ரீட்ஸ், அடுத்தடுத்த செட்களை எளிதாகக் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 7-6(1), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், நடப்பு விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளார்.

மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், பல்கேரியாவின் அனுபவ வீரரான கிரிகோர் டிமிட்ரோவ், பிரிட்டனின் வைல்டு கார்டு வீரர் ஆர்தர் ஃபெரியை எதிர்கொண்டார். கடும் சவால் நிறைந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஆர்தர் ஃபெரி 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிமிட்ரோவ், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை முறையே 6-3, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி கம்பேக் கொடுத்தார்.

அதன்பின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்தர் ஃபெரி நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், ஐந்தாவது செட்டை 7-6 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், ஆர்தர் ஃபெரி 7-5, 3-6, 4-6, 6-4, 7-6(7) என்ற செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மறுபக்கம், அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்த டிமிட்ரோவ் ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறினார்.

பௌலினி ஆதிக்கம், மேடிசன் கீஸ் வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இத்தாலியின் ஜாஸ்மின் பௌலினி, நடப்பு சாம்பியனை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிலிப்பைன்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா ஈலாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் பௌலினி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் பலத்த கம்பேக் கொடுத்த ஈலா, இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.

இதனால் போட்டியின் முடிவு மூன்றாவது செட்டிற்குச் சென்றது. மூன்றாவது செட்டில் கூடுதல் கவனத்துடன் விளையாடிய பௌலினி, அதை 6-3 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் ஆட்டத்தின் முடிவில் ஜாஸ்மின் பௌலினி 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மறுபக்கம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈலா அதிர்ச்சி தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க:

மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை மேடிசன் கீஸ், செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார். இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நோஸ்கோவா 6-4, 7-6(2) என்ற நேர் செட்களில் மேடிசன் கீஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேசமயம், இந்தத் தோல்வி காரணமாக மேடிசன் கீஸ் ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறினார்.