பிரெஞ்ச் ஓபன்: ஃபெடரர் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக்
ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடரில் தொடர்ந்து 21 முறை மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் ஃபெடரரின் (விம்பிள்டன் தொடர்) வரலாற்றுச் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.


Published : May 28, 2026 at 1:16 PM IST
ஹைதராபாத்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் நட்சத்திர வீரர்கள் நோவக் ஜோகோவிச் மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தங்கள் பிரிவுகளில் அபார வெற்றியைப் பதிவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரபலமான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பு சீசன் பாரிஸில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரும், செர்பியாவின் நட்சத்திர வீரருமான நொவாக் ஜோகோவிச், பிரான்ஸைச் சேர்ந்த வாலண்டின் ராயரை எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி முதல் செட்டை 6-3 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார். இதனால் ஜோகோவிச் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது செட்டில் கம்பேக் கொடுத்த ராயர் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.
120 matches at #RolandGarros… and he’s not done yet 🇷🇸🔥
— Roland-Garros (@rolandgarros) May 27, 2026
Looking forward to many more, @DjokerNole 🙌
Stat of the day by @infosys#RolandGarroswithInfosys #ExperiencetheNext pic.twitter.com/HTnIG4DvYF
இதன் காரணமாக இந்த போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. அதன்பின் நான்காவது செட்டிலும் அபாரமாக விளையாடிய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் அதனை கைப்பற்றினார். இதன் மூலம் ஆட்டமுடிவில் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வாலண்டின் ராயரை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்ததுடன், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் தொடர்ந்து 21ஆவது ஆண்டாக மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்து ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேற்கொண்டு ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடரில் தொடர்ந்து 21 முறை மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் ஃபெடரரின் (விம்பிள்டன் தொடர்) வரலாற்றுச் சாதனையையும் ஜோகோவிச் தற்போது சமன் செய்து அசத்தியுள்ளார்.
அதேசமயம் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக், 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சாரா பெஜ்லெக்கை வீழ்த்தி எளிதான வெற்றியை பதிவு செய்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Iga's second round highlights dropped ↘️#RolandGarros pic.twitter.com/PqG8hFbKiq
— Roland-Garros (@rolandgarros) May 27, 2026
இதையும் படிக்கவும் |
இதனையடுத்து ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரேசிலைச் சேர்ந்த இளம் வீரர் ஜோவ் போன்சேகாவை எதிர்கொள்ளவுள்ளார். மறுபக்கம், மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக், சக நாட்டவரான மக்டா லினெட்டை எதிர்கொள்ளவுள்ளார். இதன் மூலம், பிரெஞ்ச் ஓபன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு போலந்து வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

