ETV Bharat / sports

''நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்'' - வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; விராட் கோலி அசத்தல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழுத்து வலியால் பாதியில் விலகிய கேப்டன் சுப்மன் கில் உடல் தகுதியை எட்டியதால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணி வீரர்கள்
இந்தியா-நியூசிலாந்து அணி வீரர்கள் (AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 11, 2026 at 5:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வதோதரா: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழுத்து வலியால் பாதியில் விலகிய கேப்டன் சுப்மன் கில் உடல் தகுதியை எட்டியதால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார். காயம் காரணமாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறவில்லை.

சுழற்பந்து வீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பிரசித், சிராஜ் மற்றும் ராணா உட்பட 6 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் கண்டது. பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் விதமாக ரோஹித், கோலி, கில், ஸ்ரேயாஸ் உள்ளிட்டோரும் அணியில் இடம்பெற்றனர். இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் கான்வே 56, ஹன்றி நிக்கோல் 62, டேரல் மிட்சல் 69 ரன்களை குவிக்க நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 302 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ், ராணா, பிரசித் உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில் 40 ஆவது ஓவரில் விராட் கோலி ஆட்டம் இழந்தார். இவர், சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி தனது 624 ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை அடைந்துள்ளார்.

மேலும் இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். அதேப்போல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் குவித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 49 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்தபடியாக ஷுப்மன் கில் 56 ரன்கள், ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன்கள் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.