ETV Bharat / sports

'ஜெர்சியில் ஒளிரும் சிறப்புப் பதக்கங்கள்': மெஸ்ஸி, ரொனால்டோவின் ஜெர்சியில் இருக்கும் ‘லெகசி’ பதக்கம் குறிப்பது என்ன?

மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்களுக்கு 'லெகசி' சட்டைப் பதக்கங்களும், முன்னாள் விருது வெற்றியாளர்கள் மற்றும் சாம்பியன் அணிகளுக்குத் தனித்துவமான தங்கச் சட்டைப் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஜெர்சியில் ஒளிரும் சிறப்புப் பதக்கங்கள்
ஜெர்சியில் ஒளிரும் சிறப்புப் பதக்கங்கள் (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : July 6, 2026 at 5:38 PM IST

4 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில் வீரர்களின் சாதனைகளையும் அணிகளின் வரலாற்றையும் கௌரவிக்க ‘சிறப்புக் பதக்கங்களை’ (Sleeve Patches) ஃபிஃபா முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த உலகக் கோப்பையில், தற்சமயம் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கால்பந்து உலகம் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான மாற்றத்திற்கு நடப்பு ஃபஃபா உலகக் கோப்பை ஒரு சான்றாக உள்ளது என்றால் அது மிகையல்ல. ஏனெனில், இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள ஜாம்பவான் வீரர்கள் முதல், அறிமுக வீரர்கள் அவரை அவர்களின் சாதனைகளுக்கும் அணிகளின் பாரம்பரியத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில், ஃபிஃபா அமைப்பு ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது.

அதுதான், உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சிறப்புப் பதக்கங்கள்’ (Sleeve Patches) ஆகும். இதற்கு முன்பு உலகக் கோப்பைத் தொடர்களில் அனைத்து வீரர்களும் ஒரே மாதிரியான லோகோக்களையே தோள்பட்டைகளில் அணிந்து விளையாடினர். ஆனால், தற்போது இந்த நடைமுறை உடைக்கப்பட்டு, ஒவ்வொரு வீரரின் தகுதி மற்றும் சாதனையின் அடிப்படையில் பிரத்யேகச் பதக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை வென்ற அணிகளுக்கான பதக்கம்
உலகக் கோப்பை வென்ற அணிகளுக்கான பதக்கம் (Getty Images)

அணிகளுக்கான பதக்கங்கள் (Team Patches)

நடப்பு ஃபீஃபா உலகக் கோப்பைத் தொடரில் மைதானத்தில் களமிறங்கும் போதே ஒரு அணியின் வரலாற்றுப் பலத்தை எதிரணிக்கு உணர்த்தும் வகையில் இந்த பதக்கங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக உலகக் கோப்பையை வென்ற அணிகள், தொடர்ந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று வரும் அணிகள் மற்றும் முதன்முறையாகக் களம் காணும் அறிமுக அணிகள் என மூன்று வகையிலான பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோல்டன் பூட் பதக்கம்
கோல்டன் பூட் பதக்கம் (Getty Images)

தங்க உலகக்கோப்பை சட்டைப் பதக்கம் (Gold Tournament Patch): கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பையை முத்தமிட்ட நாடுகள் மைதானத்தில் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக இந்தச் சிறப்புச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. நடப்புத் தொடரில் பங்கேற்கும் அணிகளில், இதற்கு முன்பு உலகக் கோப்பையை வென்ற 7 நாடுகளின் வீரர்கள் மட்டுமே தங்களது ஜெர்சியில் இந்த தங்கப் பதக்கத்தை அணியும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

வழக்கமான பதக்கம் (Standard Tournament Patch): இதுவரை உலகக் கோப்பை மகுடத்தைச் சூடாத, ஆனால் உலகக் கோப்பை கனவோடு களமிறங்கும் மற்ற அனைத்து நாடுகளின் வீரர்களும் கறுப்பு-வெள்ளை அல்லது வழக்கமான வண்ணச் சட்டைப் பதக்கங்களை அணிந்து விளையாடுவார்கள். இதில், உலகக் கோப்பைத் தொடரில் அறிமுக அணிகளாகக் களமிறங்கும் நாடுகளுக்கு எனப் பிரத்யேகச் சட்டைப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தனிநபர் சட்டைப் பதக்கங்கள் (Individual Milestone Patches)

இந்தத் தொடரின் மிக சுவாரசியமான அம்சமே தனிநபர் மைல்கல்களைக் குறிக்கும் சட்டைப் பதக்கங்கள்தான். இச்சின்னங்கள் மூலம் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஜாம்பவான்களையும், தற்போது முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இளம் வீரர்களையும் ஒரே பார்வையில் ரசிகர்கள் எளிதாக அடையாளம் காண முடிகிறது.

லெகசி பதக்கம்
லெகசி பதக்கம் (Getty Images)

லெகசி பதக்கம் (Legacy Patch): இது கால்பந்து உலகின் ‘லெஜண்ட்’ அந்தஸ்தைப் பெற்றவர்களுக்கானது. தங்களது 5ஆவது அல்லது அதற்கும் மேற்பட்ட உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடும் ஆகச்சிறந்த வீரர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டைப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. நடப்புத் தொடரில் தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க 6ஆவது உலகக் கோப்பையில் களம் கண்டுள்ள லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் தங்களது 5-வது தொடரில் விளையாடும் லூகா மோட்ரிச், மானுவேல் நோயர் போன்ற உலகப் புகழ்பெற்ற வீரர்கள் மட்டுமே இந்த அரிய 'லெகசி' சட்டைப் பதக்கங்களை அணிந்து விளையாடும் பெருமையைப் பெற்றுள்ளனர்.

அறிமுக வீரர்களுக்கான பதக்கம்
அறிமுக வீரர்களுக்கான பதக்கம் (Getty Images)

அறிமுக பதக்கம் (Debut Patch): உலகக் கோப்பை மேடையில் முதன்முறையாகக் கால் பதிக்கும் இளம் வீரர்களை ஊக்குவிக்க "ஃபிஃபா உலகக் கோப்பை அறிமுக வீரர்" (Debut FIFA World Cup) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள ஸ்பெயினின் லாமின் யமால், நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தச் சின்னத்தை அணிந்து விளையாடி வருகின்றனர்.

கோல்டன் கிளவ் பதக்கம்
கோல்டன் கிளவ் பதக்கம் (Getty Images)

விருது வென்றவர்களுக்கான தனித்துவ பதக்கங்கள்: முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் மிக உயரிய தனிநபர் விருதுகளை வென்றவர்கள், தங்களின் முந்தைய சாதனையைப் பறைசாற்றும் விதமாக இந்தச் சிறப்பு பதக்கங்களை அணிந்துள்ளனர். அந்த வகையில், சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' வென்றவர்கள் (லியோனல் மெஸ்ஸி, லூகா மோட்ரிச்), அதிக கோல் அடித்த 'கோல்டன் பூட்' வெற்றியாளர்கள் (கிலியன் எம்பாப்பே, ஹாரி கேன், ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்) மற்றும் சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் க்ளோவ்' வென்றவரான எமிலியானோ மார்டினெஸ் ஆகியோருக்கு இந்தச் சிறப்ப பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

1000ஆவது போட்டிக்கான சிறப்பு பதக்கம்
1000ஆவது போட்டிக்கான சிறப்பு பதக்கம் (Getty Images)

1000ஆவது போட்டிக்கான சிறப்புச் சட்டைப் பதக்கம் (Special Edition Patches)

இந்த உலகக் கோப்பைத் தொடரானது ஒட்டுமொத்த உலகக் கோப்பை வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்லான 1000ஆவது அதிகாரப்பூர்வப் போட்டியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாட, அந்த ஒரு குறிப்பிட்ட போட்டியில் விளையாடிய வீரர்களின் ஜெர்சிகளில் மட்டும் பயன்படுத்த பிரத்யேகச் சட்டைப் பதக்கம் (1,000th Match Commemorative Patch) உருவாக்கப்பட்டது. இது கால்பந்து வரலாற்றுப் புத்தகத்தில் நீங்கா இடம்பிடித்த ஒரு பிரத்யேகப் பதிப்பாக மாறியுள்ளது.

கோல்டன் பூட் பதக்கம்
கோல்டன் பூட் பதக்கம் (Getty Images)

ரசிகர்களின் வரவேற்பு

ஃபீஃபாவின் இந்த அதிரடி மாற்றம் வெறும் மைதானத்தோடு நின்றுவிடவில்லை. உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஜெர்சி சேகரிப்பாளர்கள் (Jersey Collectors) மத்தியில் இந்த பதக்கங்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தங்களுக்குப் பிடித்த வீரர்கள் அணியும் அதே பதக்கங்கள் கொண்ட அசல் ஜெர்சிகளை வாங்குவதற்கு ரசிகர்கள் உலகெங்கும் அலைமோதி வருகின்றனர்.

இதையும் படிக்கவும்

ஃபிஃபா உலகக்கோப்பையின் இந்த புதிய பதக்க முறை, கால்பந்து விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது வெறும் பதக்கங்கள் மட்டுமல்ல, பல ஆண்டுகளாகத் தங்களின் அணிக்காக விளையாடி பல்வேறு சரித்திரங்களைப் படைத்துள்ள வீரர்களைக் கௌரவப்படுத்தும் அடையாளங்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் இனிவரும் உலகக் கோப்பை சீசன்களிலும் ஃபிஃபா இந்த முறையைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.