88 ஆண்டுகளுக்குப் பின் முதல் நாக்அவுட் வெற்றி; உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்த சுவிட்சர்லாந்து
ஃபிஃபா உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் கடந்த 88 ஆண்டுகளாக நீடித்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுவிட்சர்லாந்து அணி, அல்ஜீரியாவை வீழ்த்தி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.


Published : July 3, 2026 at 12:30 PM IST
ஹைதராபாத்: அல்ஜீரியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாக்-அவுட் சுற்றான 'ரவுண்ட் ஆஃப் 32' ஆட்டங்கள் தற்சமயம் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில், சுவிட்சர்லாந்து மற்றும் அல்ஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கனடாவின் வான்கூவர் நகரில் அமைந்துள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து அணி தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் பிரீல் எம்போலோ கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். மறுபக்கம் அல்ஜீரிய அணியின் கோலடிக்கும் முயற்சிகளை சுவிட்சர்லாந்து டிஃபென்ஸ் தடுத்து நிறுத்தியது.
🇨🇭 Switzerland have qualified for the Round of 16!#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 3, 2026
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சுவிட்சர்லாந்து அணி, ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளிலேயே அல்ஜீரிய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கோலை பதிவு செய்து முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. அந்தவகையில் ஆட்டத்தின் 46ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் டான் போடாய் அந்த கோலை பதிவு செய்திருந்தார்.
மறுமுனையில் இறுதி நிமிடம் வரை போராடிய அல்ஜீரிய அணியால், எதிரணியின் டிஃபென்ஸைக் கடந்து எந்தவொரு கோலையும் பதிவுசெய்ய முடியாமல் தடுமாறியது. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், நடப்பு உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
🎟️ Switzerland punches its ticket to the Round of 16!#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 3, 2026
இதையும் படிங்க: |
மேலும் இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி 88 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடைசியாக அந்த அணி 1938ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பின் தற்போது தான் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதுதவிர, ஒரே உலகக்கோப்பைத் தொடரில் சுவிட்சர்லாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

