ஃபிஃபா உலகக் கோப்பை 2026: காலிறுதிக்கு தகுதி பெற்ற 8 அணிகள் எவை? முழு விவரம் இதோ!
ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கான 'கோல்டன் பூட்' விருதை வெல்வதில், தற்போதைய நிலவரப்படி அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.


Published : July 8, 2026 at 2:45 PM IST
ஹைதராபாத்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுகள் முடிவடைந்த நிலையில், காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளின் விபரம் மற்றும் போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உற்றுநோக்கி வரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிப் போட்டிக்கான கடைசி இரண்டு இடங்களை அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் கைப்பற்றியதை அடுத்து, போட்டி அட்டவணை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கிலும், சுவிட்சர்லாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-3 என்ற கணக்கிலும் த்ரில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இவற்றுடன் மொராக்கோ, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன.
அதேநேரம், இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரேசில் போன்ற முன்னணி ஜாம்பவான் அணிகள் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் காலிறுதிச்சுற்று ஆட்டத்திற்கான போட்டி அட்டவணை மற்றும் அணி விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Next: Quarter-finals#FIFAWorldCup pic.twitter.com/To50MPa0Ye
— FIFA World Cup (@FIFAWorldCup) July 8, 2026
பிரான்ஸ் vs மொராக்கோ (ஜூலை 10, அதிகாலை 1:30 மணி)
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் வெல்லக்கூடிய முதன்மை அணிகளில் ஒன்றாக பிரான்ஸ் கணிக்கப்படுகிறது. மறுபக்கம், கடந்த உலகக் கோப்பையில் பெற்ற தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்க மொராக்கோ அணி தீவிரமாகக் காத்திருக்கிறது.
இப்போட்டியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 19 கோல்களை அடித்துள்ள அவர், லியோனல் மெஸ்ஸியின் சாதனையை (21 கோல்கள்) சமன் செய்ய இன்னும் இரண்டு கோல்கள் மட்டுமே தேவை என்ற இலக்குடன் களம் காண்கிறார். அதேநேரம், மொராக்கோ அணியின் கேப்டன் அஷ்ரப் ஹக்கிமி இத்தொடரில் தொடர்ச்சியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது
ஸ்பெயின் vs பெல்ஜியம் (ஜூலை 11, நள்ளிரவு 12:30 மணி)
இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற தீவிரமாகப் போராடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, அதன்பின்னர் தற்போது வரை இறுதிப் போட்டிக்குக் கூட முன்னேற முடியாமல் தடுமாறி வருகிறது.
இருப்பினும் இந்த முறை, லாமின் யமால், பெட்ரி, காவி, ரோத்ரி மற்றும் நிகோ வில்லியம்ஸ் போன்ற புதிய தலைமுறை இளம் நட்சத்திரங்கள் ஸ்பெயின் அணியை மீண்டும் சாம்பியனாக்கும் முனைப்பில் விளையாடி வருகின்றனர். மறுபக்கம், பெல்ஜியம் அணி இத்தொடரில் இதுவரை ஒரு ஆதிக்கமிக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, கெவின் டி புரூய்ன மற்றும் ரொமேலு லுகாகு போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
நார்வே vs இங்கிலாந்து (ஜூலை 12, அதிகாலை 2:30 மணி)
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் மூன்றாவது காலிறுதிப் போட்டியில், எர்லிங் ஹாலாண்ட் தலைமையிலான நார்வே அணியை எதிர்த்து, ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. உலகக் கால்பந்தின் இரு முன்னணி நட்சத்திர ஸ்ட்ரைக்கர்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நார்வே அணி பலம் வாய்ந்த பிரேசிலை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த காலிறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம், இங்கிலாந்து அணியும் நடப்புத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் கோல்டன் பூட் பந்தயத்தில் எர்லிங் ஹாலாண்ட் 7 கோல்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹாரி கேன் 6 கோல்களுடன் நான்காம் இடத்திலும் இருப்பது இப்போட்டிக்கான சுவாரசியத்தை மேலும் கூட்டியுள்ளது.
அர்ஜென்டினா vs சுவிட்சர்லாந்து (ஜூலை 12, அதிகாலை 6:30 மணி)
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் கடைசி காலிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றில் எகிப்துக்கு எதிராகப் பெற்ற சர்ச்சைக்குரிய வெற்றிக்குப் பிறகே அர்ஜென்டினா இந்தச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மறுபக்கம், சுவிட்சர்லாந்து அணியும் இத்தொடரில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி, கொலம்பியா அணியை பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்திய உத்வேகத்துடன் களம் காண்கிறது.
இத்தொடரில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற முன்னணி அணிகள் ஏற்கனவே வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளன. அதேபோல், அறிமுக அணியான கேப் வெர்டேவுக்கு எதிராகவும், எகிப்துக்கு எதிராகவும் அர்ஜென்டினா அணி வெற்றி பெறக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதனால், ஃபார்மில் இருக்கும் சுவிட்சர்லாந்துக்கு எதிரான இந்த வாழ்வா-சாவா போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
The adidas Golden Boot race continues...#FIFAWorldCup pic.twitter.com/tnz3pZuLpv
— FIFA World Cup (@FIFAWorldCup) July 8, 2026
இதையும் படிங்க: |
கோல்டன் பூட் பந்தயம்
இத்தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கான 'கோல்டன் பூட்' விருதை வெல்வதில், தற்போதைய நிலவரப்படி அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே (7 கோல்கள், 2 அசிஸ்ட்கள்) மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் (7 கோல்கள், 0 அசிஸ்ட்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் மெஸ்ஸிக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் 6 கோல்களுடன் நான்காவது இடத்தில் இந்த ரேஸில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா): 8 கோல்கள், 1 அசிஸ்ட்
கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்): 7 கோல்கள், 2 அசிஸ்ட்கள்
எர்லிங் ஹாலாண்ட் (நார்வே): 7 கோல்கள், 0 அசிஸ்ட்
ஹாரி கேன் (இங்கிலாந்து): 6 கோல்கள், 1 அசிஸ்ட்

