ஃபிஃபா உலகக் கோப்பை 2026: பிரேசில் அதிர்ச்சி தோல்வி; காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் கூட்டு நாடாக தொடரை நடத்தும் மெக்சிகோ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


Published : July 6, 2026 at 9:48 AM IST
ஹைதராபாத்: நார்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில், பிரேசில் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடர் தற்போது நாக்-அவுட் சுற்றை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான 'ரவுண்ட் ஆஃப் 16' ஆட்டத்தில் பிரேசில் மற்றும் நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தின.
பிரேசில் அதிர்ச்சி தோல்வி
இரு அணிகளும் டிஃபென்ஸில் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதல் பாதி முடிவில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் நார்வே அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. குறிப்பாக, அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் ஆட்டத்தின் 79 மற்றும் 89ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
பின்னர், ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+10ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். எனினும், அதன்பின் பிரேசில் அணியால் எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், காலிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Erling Haaland's brace sends Norway to the quarter-finals! 👊#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 5, 2026
இந்த வெற்றியின் மூலம், கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் நார்வே அணி முதன்முறையாகக் காலிறுதிக்குள் நுழைந்து சாதனையும் படைத்துள்ளது. மறுபக்கம், 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசில் அணி, 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையின் ஆரம்ப சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இங்கிலாந்து த்ரில் வெற்றி
நேற்று மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், கூட்டு நாடாகத் தொடரை நடத்தும் மெக்சிகோ அணியை இங்கிலாந்து எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணிக்கு, ஆட்டத்தின் 36 மற்றும் 38ஆவது நிமிடங்களில் நட்சத்திர வீரர் ஜூட் பெலிங்ஹாம் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பதிவு செய்து மிரட்டினார். அதன்பின் கம்பேக் கொடுத்த மெக்சிகோ அணிக்கு, 42ஆவது நிமிடத்தில் ஜூலியன் கினோனஸ் கோலடித்தார்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சா ரெட் கார்டு பெற்று வெளியேறியதால், இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் ஹாரி கேன் கோலடிக்க, அணியின் வெற்றியும் உறுதியானது.
பின்னர், ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரவுல் ஜிமினெஸ் மெக்சிகோ அணிக்காக இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். ஆனால், அதன்பின் இறுதிவரை போராடிய மெக்சிகோ அணியால் மேற்கொண்டு எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியவில்லை. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
🏴 England advance to the final eight.#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 6, 2026
இதையும் படிக்கவும் |
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் காலிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நார்வேயை எதிர்கொள்ள உள்ளது. இதனால் இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

