உலகக் கோப்பையில் நெய்மார் விளையாடுவது சந்தேகம்? பிரேசில் ரசிகர்கள் அதிர்ச்சி
உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சியில் பிரேசில் அணி ஈடுபட்டு வந்த நிலையில், நெய்மாருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Published : May 29, 2026 at 3:05 PM IST
ஹைதராபாத்: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்க சில நாள்களே உள்ள நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கல் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவில் எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரானது கோலாகமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 48 அணிகள் இந்த முறைய கோப்பைக்காக போட்டியிட உள்ளதால், இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதனையடுத்து தொடரில் பங்கேற்கும் அணிகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருவதுடன், தீவிரமான தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னர் பிரேசில் கால்பந்து அணியை தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி அறிவித்தார். இதில் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் இரண்டாண்டுகளுக்கு பிறகு நெய்மர் ஜூனியர் பிரேசில் அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னதாக 2023ஆம் ஆண்டு உருகுவே அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட முழங்கால் காயம் மற்றும் அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகள் காரணமாக அவரால் எந்தவொரு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இந்நிலையில் தான் கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் பிரேசில் தேசிய அணிக்காக கம்பேக் கொடுக்க இருந்தார். இந்நிலையில். உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சியில் பிரேசில் அணி ஈடுபட்டு வந்த நிலையில், அதில் நெய்மாருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறி, மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கிரேட் 2 காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவரது காயம் முழுமையாக குணமடைய 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் ரோட்ரிக் லாஸ்மர்,"நெய்மருக்கு அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவருக்கு இரண்டாம் நிலை காயம் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து அவர் குணமடைய இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தேவைப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த காயம் காரணமாக, உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெறவுள்ள பனாமா மற்றும் எகிப்து அணிகளுக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டிகளில் இருந்தும் நெய்மார் விலகியுள்ளார். அதேசமயம், ஜூன் 13 அன்று மொராக்கோ அணிக்கு எதிராக நியூஜெர்சியில் நடைபெறவுள்ள பிரேசில் அணியின் முதல் உலகக் கோப்பை லீக் ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஒருவேளை நெய்மரின் காயம் தீவிரமடையும் பட்சத்தில் அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து மொத்தமாக விலகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது பிரேசில் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் பிரேசில் அணி குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இதையும் படிக்கவும் |
இந்த பிரிவில் பிரேசில் அணியுடன் மொராக்கோ, தென் கொரியா மற்றும் கனடா ஆகிய வலுவான அணிகள் மோதவுள்ளன. சமபலம் வாய்ந்த அணிகள் இந்த குரூப்பில் இடம் பெற்றிருப்பதால், நாக்-அவுட் சுற்றுக்கு எந்தெந்தெ அணிகள் தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

