ETV Bharat / sports

மெஸ்சியின் மேஜிக், பெனால்டி த்ரில்லர்: உலகக் கோப்பை காலிறுதியில் அர்ஜென்டினா vs சுவிட்சர்லாந்து மோதல்!

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 8, 2026 at 9:58 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஃபிஃபா உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் அசாத்திய வெற்றிகளைப் பெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த உலகக் கோப்பையில், தற்சமயம் காலிறுதி சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. அந்தவகையில் கடந்த வாரம் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, எகிப்து அணியை எதிர்கொண்டது.

அர்ஜென்டினா த்ரில் வெற்றி

அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில் தொடக்கம் முதலே எகிப்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிமும், 66ஆவது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோவும் கோல் அடிக்க, எகிப்து 2-0 என வலுவான முன்னிலை பெற்று அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் அர்ஜென்டினா அணியின் தோல்வியும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்று பலரும் நினைத்தனர்.

ஆனால், ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் அபார கம்பேக் கொடுத்த அர்ஜென்டினா அணிக்கு, 78ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்சியின் அசிஸ்ட் மூலம் கிறிஸ்டியன் ரொமேரோ முதல் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 82ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸியும் கோலடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தார். இதன் காரணமாக போட்டியின் முடிவை எட்ட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதன்படி, ஆட்டத்தின் 90+3 ஆவது நிமிடத்தில் லவுடாரோ மார்டினெஸ் கொடுத்த அசிஸ்ட் மூலம் என்சோ பெர்னாண்டஸ் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுபக்கம் இறுதிவரை போராடிய எகிப்து அணியால் அதன்பின் எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியவில்லை. இறுதியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றதுடன் காலிறுதிச் சுற்றுக்கும் முன்னேறியது.

சுவிட்சர்லாந்து வரலாற்று வெற்றி

வான்கூவர் மைதானத்தில் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தங்களின் டிஃபென்ஸில் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தின. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்திலும், 30 நிமிட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட் முறையில், இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. அதன்பின் கொலம்பியாவின் 3ஆவது கோல் முயற்சியை சுவிஸ் கோல்கீப்பர் கிரிகோர் கோபெல் தடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கோபெல் தந்த இந்த முக்கியத் திருப்புமுனையால் சுவிட்சர்லாந்து அணி எவ்வித தவறும் செய்யாமல் அடுத்தடுத்து கோல்களை பதிவுசெய்தது.

இதையும் படிக்கவும்

இறுதியில், சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கணக்கில் கொலம்பியா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1954 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுவிட்சர்லாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.