ETV Bharat / sports

இந்தியா vs இங்கிலாந்து: ஆக்ரோஷமா.. அனுபவமா.. வான்கடேயில் வெல்லப்போவது யார்?

இந்திய அணி தங்களுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆதிக்கம் செலுத்துமா? அல்லது இந்திய மண்ணிலும் தங்களின் அதிரடியை இங்கிலாந்து நிரூபிக்கப் போகிறதா? என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : March 4, 2026 at 3:50 PM IST

3 Min Read
Choose ETV Bharat

மும்பை: மார்ச் 5ஆம் தேதி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கடந்த தசாப்தத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக, இந்திய அணி ஆதிக்கத்தை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

களமும், சவாலும்

இந்தியாவைப் பொறுத்தவரை, மும்பை என்பது வெறும் நகரம் அல்ல, அது ஒரு உணர்வு. வான்கடே மைதானத்தில் குறுகிய பவுண்டரிகள், மின் விளக்குகளின் கீழ் பந்தின் வேகம், 8.30 மணிக்கு மேல் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பனிப்பொழிவு என அனைத்தும் இந்திய வீரர்களுக்கு தெரிந்த ஒன்றே. ஏனெனில் இந்திய அணி தங்களுடைய பெரும்பாலான போட்டிகளை இந்த மைதானத்தில் விளையாடியுள்ளது.

ஆனால், மைதானத்தை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பதால் மட்டுமே போட்டியில் வெற்றியை பெற முடியாது. ஏனெனில் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் வீரர்களின் அனுபவம் கைக்கொடுத்தாலும், அதே அனுபவம் அவர்களுடைய அழுத்தமாகவும் மாறும் அச்சமும் உள்ளது.

முக்கிய அம்சங்கள்

இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில், நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியை மூன்று முக்கிய அம்சங்கள் தீர்மானிக்கக்கூடும். அதன்படி,

பவர்பிளே: டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரையிலும் இங்கிலாந்தின் திட்டம் தெளிவானது. விக்கெட்டுகள் சரிந்தாலும் அவர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பது மட்டுமே திட்டமாக வைத்துள்ளனர். மறுபக்கம் இந்திய அணியின் பவுலர்களுக்கும் இங்கிலாந்து சவாலுக்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளனர்.

மிடில் ஓவர்கள்: இந்தத் தொடரில் இந்தியாவின் மிகப்பெரிய பலம் 7 முதல் 15 ஓவர்களுக்குள் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான். சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் கட்டர் பந்துகளை வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் இங்கிலாந்தின் மிடில் ஆர்டருக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

டெத் ஓவர்கள்: வான்கடே மைதானத்தில் எந்த அணி அதிக யார்க்கர் பந்துகளை வீசுகிறதோ அவர்களே வெற்றியை தீர்மானிக்கின்றனர். ஆனாலும் பனியின் தாக்கம் இருக்கும் பட்சத்தில், அது பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். அதனால் இங்கிலாந்து அணி மெதுவான மற்றும் லெக்-கட்டர்களை முழுமையாக நம்பியுள்ளது. மறுபக்கம் இந்திய அணி தங்களுடைய ஸ்பின்னர்கள் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளது.

உளவியல் போர்

அரையிறுதிப் போட்டிகள் பெரும்பாலும் வீரர்களின் மன திடத்தால் மட்டுமே வெல்லப்படுகின்றன. இதில் இந்திய அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது அழுத்தத்தைத் தந்தாலும், வான்கடே ரசிகர்களின் ஆரவாரம் அவர்களுக்கு உத்வேகத்தையும் அளிக்கும்.

மறுபுறம், இங்கிலாந்து அணி சவால்களை விரும்பி ஏற்கக்கூடியது. 190 ரன்கள் என்ற இலக்கையும் கூட அவர்கள் சேஸிங் செய்ய ஆயத்தமாக உள்ளனர். அதனால் இந்த போட்டியில் எந்த அணி சூழ்நிலையை புரிந்து விளையாடுகிறதோ அவர்களுக்கே வெற்றி கிட்டும்.

இந்தியாவின் பலவீனம்

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் அவர்கள் முதல் 6 ஓவர்களில் சராசரியாக 2 விக்கெட்டுகளை இழப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இருப்பினும் சஞ்சு சாம்சனின் வருக்கைக்கு பிறகு அதில் சில மாற்றங்கள் நடந்திருப்பது அணிக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது.

அதேசமயம் இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், பீல்டிங் ஒரு பலவீனமாகவே தொடர்கிறது. ஏனெனில் இதுவரை இந்திய வீரர்கள் நடப்பு டி20 தொடரில் மட்டும் 14 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முக்கிய போட்டிகளிலும் கூட சில தவறுகளை இந்திய அணி செய்திருந்தது. இதில் இங்கிலாந்து அணி ஒரு ரன்னை இரண்டு ரன்களாக மாற்றும் துடிப்புடன் இருப்பதால், இந்திய பீல்டர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

டாஸ் சாதகம்

வான்கடே மைதானத்தில் டாஸ் என்பது வெறும் சடங்கு அல்ல. பனிப்பொழிவு ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடும் என்பதால், முதலில் பந்துவீசுவதா அல்லது பேட்டிங் செய்வதா என்ற கேப்டனின் முடிவு ஆட்டத்தின் முடிவை எதிரொலிக்கும். அதனால் இங்கு டாஸ் நிகழ்வு ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இதையும் படிங்க

முடிவு என்ன?

மார்ச் 5 மாலை, மும்பை வான்கடே மைதானம் ஒரு பெரும் சாவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தங்களுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆதிக்கம் செலுத்துமா? அல்லது இந்திய மண்ணிலும் தங்களின் அதிரடியை இங்கிலாந்து நிரூபிக்கப் போகிறதா? ஆக்ரோஷத்திற்கும், அனுபவத்திற்கும் இடையேயான மோதலில் ​​ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும்.