இங்கிலாந்து vs இந்தியா 3ஆவது டி20: 76 ரன்களுக்குச் சுருண்ட இந்தியா; 125 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.


Published : July 8, 2026 at 9:28 AM IST
ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும், இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு, பிரின்ஸ் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹாரி புரூக் 16 ரன்களுக்கும், ஜேக்கப் பெத்தெல் 13 ரன்களுக்கும், டாம் பான்டன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Watch out, Jos about! 🔥
— England Cricket (@englandcricket) July 7, 2026
Match Centre: https://t.co/z33XkQqP1e pic.twitter.com/gmvrqMvVhv
அதன்பின், பில் சால்டுடன் ஜோடி சேர்ந்த சாம் கரண் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதற்கிடையில் அரைசதம் கடந்த பில் சால்ட், 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 14 ரன்களுக்கும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 5 ரன்களுக்கும் நடையைக் கட்டினர். இறுதிவரை களத்தில் இருந்த சாம் கரண் 41 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பின்னர், இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அபிஷேக் சர்மா 10 ரன்களுக்கும், வைபவ் சூர்யவன்ஷி 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷன் 13 ரன்களுக்கும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களுக்கும், அக்ஸர் படேல் 10 ரன்களுக்கும், திலக் வர்மா 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்துக் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, இந்திய அணி 11.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Archer 🆚 Sooryavanshi
— England Cricket (@englandcricket) July 7, 2026
Jofra strikes! ☝️
Match Centre: https://t.co/ZWzBgf1rTw pic.twitter.com/Bd44HUbJZB
இதையும் படிங்க: |
இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. மேலும், இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

