ETV Bharat / sports

இங்கிலாந்து தொடரில் மீண்டும் சஞ்சு சாம்சன்?- பிளேயிங் லெவன் மாற்றங்கள் குறித்து மனம் திறந்த காம்பீர்!

இந்தியா-இங்கிலாந்து டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நான்காவது டி20 போட்டி, நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சஞ்சு சாம்சன் - கௌதம் கம்பீர்
சஞ்சு சாம்சன் - கௌதம் கம்பீர் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : July 8, 2026 at 5:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் நீக்கம் மற்றும் அவரது கம்பேக் வாய்ப்புகள் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாகப் பாதியிலேயே ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றிகளை பதிவு செய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்தத் தொடரைச் சமன் செய்ய முடியும். இதனால், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நான்காவது டி20 போட்டி, நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சந்தித்த 125 ரன்கள் படுதோல்விக்குப் பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்திய அணி தற்போது ஒரு மறுசீரமைப்பு மற்றும் மாற்றக் கட்டத்தில் பயணித்து வருவதால், இளம் வீரர்களுக்குப் போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய காம்பீர், "இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் இல்லாத சூழலில், தற்போதைய அணி ஒரு புதிய தொடக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. புதிய மற்றும் இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளவும், தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடவும் சிறிது காலம் தேவைப்படும். எனவே, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பொறுமை காக்க வேண்டும்.

அயர்லாந்து தொடரிலிருந்தே இந்திய அணி ஆடுகளத்தின் தன்மைகளைச் சரியாகக் கணித்து விளையாடுவதில் தவறி வருகிறது. மேலும், இப்போட்டியில் அணி கையாண்ட அதிக ஆபத்து நிறைந்த பேட்டிங் அணுகுமுறையும், ஆடுகளச் சூழலுக்கு ஏற்றவாறு ஆட்டத்தை மாற்றியமைக்காததுமே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணங்கள் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து பேசிய காம்பீர், "இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சாம்சன் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான காரணங்கள் அவரிடம் நேரடியாக விளக்கப்பட்டுள்ளன. அணியில் இடம் பெற விரும்பும் ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்.

சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை, எங்களுடைய பார்வையில் மிகத் தெளிவான புரிதல் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், இந்திய அணிக்காக அவர் அளித்த பங்களிப்பு அசாத்தியமானது. இருப்பினும், சில நேரங்களில் வீரர்களின் தற்போதைய ஃபார்மையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்காக அவரை அணியிலிருந்து முழுமையாக நீக்கிவிட்டோம் என்று அர்த்தமல்ல. இந்தத் தொடரிலேயே அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்கத் தவறியதன் காரணமாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி பெரிய அளவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதையும் படிங்க:

இதன் காரணமாக, இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் சஞ்சு சாம்சனை மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களம் இறங்குமா? என்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளன.