ETV Bharat / sports

டர்பன் டெஸ்ட் | ஆஸி பேட்ஸ்மேன்களை திணறடித்த தென்னாப்பிரிக்கா; முதல் நாளில் பவுலர்கள் ஆதிக்கம்!

ஆஸ்திரேலியாவின் நிக் மேடின்சன் 33 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளைச் சந்தித்து ரன் ஏதுமின்றி அவுட்டான 3ஆவது வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : October 9, 2026 at 8:54 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்த நிலையில், போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான நிக் மேடின்சன் 33 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த பேட்ஸ்மேன்களின் வரிசையில் இணைந்து மோசமான சாதனையைப் படைத்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்களான மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பைத் தடுக்க முயற்சித்தது. இந்த ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், லபுஷாக்னே 37 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மற்றும் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ரென்ஷா மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஆஸ்திரேலிய அணி 65.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாகப் போட்டியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் மோசமான வானிலை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதையும் படிங்க

முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேத்யூ ரென்ஷா 46 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், வியான் முல்டர் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.