ETV Bharat / sports

ஐபிஎல் 2026: ஏமாற்றமளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்: பின்னடைவுகளும், எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளும்

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் போன்ற இளம் வீரர்களின் எழுச்சி அணியின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : June 1, 2026 at 11:31 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக ஐபிஎல் தொடரிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து சாம்பியன் ஆர்சிபி அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதுஒருபுறமிருக்க, ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக பிளேஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே தொடரை விட்டு வெளியேறினர். அதிலும் மும்பை அணி 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்தை பிடித்தது.

மறுபுறம் இறுதிவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையிலும், கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் நடப்பு ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு அவ்வளவு எளிதாக இல்லை என்பதே உண்மை.

ஏனெனில் இடம்பிடித்த வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக தொடரைவிட்டு விலகியது, போதிய அனுபவமின்மை, கேப்டன்சி என பல்வேறு காரணங்கள் உள்ளன. அவ்வாறு சிஎஸ்கே அணி இந்த சீசனில் பிளேஆஃப் வாய்ப்பை இழந்ததற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அணிக்கு சாதகமான விசயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

தோல்விக்கான காரணங்கள்

வீரர்கள் காயம்: சிஎஸ்கே அணியின் பின்னடைவுக்கான முக்கிய காரணம் முன்னணி வீரர்களின் காயம் தான். தொடர் தொடங்கும் முன்னரே நாதன் எல்லிஸ் காயத்தை சந்தித்து தொடரை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கலீல் அஹ்மத், எம்.எஸ் தோனி, ஆயுஷ் மாத்ரே, ஸ்பென்சன் ஜான்சன், ராமகிருஷ்ண கோஷ் என அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக விலகியது அணியின் காம்பினேஷனை முற்றிலுமாக சிதைத்துவிட்டது.

மிடில் ஆர்டர் சொதப்பல்: வீரர்களின் காயம் ஒருபக்கம் இருக்க, அவர்களுக்கு மாற்றாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்த வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறின. குறிப்பாக மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே, மேதுயூ ஷார்ட், பிரசாந்த் வீர் உள்ளிட்டோர் பெரிதளவில் சோபிக்க தவறினர். அதிலும் தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்ததை அமைத்து கொடுத்த நிலையிலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற மிடில் ஆர்டர் தவறிவிட்டது.

டாப் ஆர்டர் ஏமாற்றம்: மேற்கொண்டு அணியின் டாப் ஆர்டர் அதிரடியான தொடக்கத்தை வழங்கினாலும், நிலைத்தன்மை இல்லாததும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் எந்தவொரு பார்ட்னர்ஷிப்பையும் உருவாக்கவில்லை. அப்படி உருவாக்கினாலும், அதில் ஏதெனும் ஒரு வீரர் முன்கூட்டிய விக்கெட்டை இழந்து அழுத்தத்தை அதிகரித்துள்ளார்.

நெருக்கடியான போட்டிகளில் தோல்வி: இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் இருந்தும் சிஎஸ்கே அணிக்கு லீக் சுற்றின் இறுதி கட்டத்திலும், பிளே ஆஃப் செல்லும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவ்வாறு கண்டிப்பாக வெல்ல வேண்டிய போட்டிகளில் சென்னை அணி வழக்கத்திற்கு மாறாக, அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதிலும் கடைசி மூன்று ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்து தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிளேஆஃபில் நுழைய முடியாமல் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது.

சாதகமான விஷயங்கள்

சஞ்சு சாம்சனின் அதிரடி பேட்டிங்: இந்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய தூணாக விளங்கியவர் சஞ்சு சாம்சன். அதிலும் இந்த சீசனில் 477 ரன்களை குவித்து, அதிக ரன்களை அடித்த சிஎஸ்கே வீரராகவும் சஞ்சு உள்ளார். சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டையுமே சமபலத்துடன் எதிர்கொண்டு ரன் ரேட்டை உயர்த்திய இவரது ஆட்டம், சிஎஸ்கே-வின் பேட்டிங் பலவீனங்களை ஓரளவிற்கு ஈடுகட்டியது குறிப்பிடத்தக்கது.

அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சு: சிஎஸ்கே அணி பவுலிங்கில் தடுமாறிய போதும், அன்ஷுல் கம்போஜ் ஒருபக்கம் சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தி இருந்தார். இந்த அவர் விளையாடிய 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தி இருந்தார். அதேசமயம் பவர்-பிளே ஓவர்கள் மட்டுமில்லாமல் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்கள்: தற்போதுள்ள சிஎஸ்கே அணியில் அன்ஷுல் கம்போஜ், கார்திக் சர்மா, பிரசாந்த் வீர் மற்றும் உர்வில் படேல் போன்ற பல இளம் இந்திய வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் அவர்கள் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளதுடன், சிஎஸ்கே அணியின் எதிர்கால நட்சத்திரங்களாக மாறுவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

இதையும் படிக்கவும்

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்றாலும், இது அடுத்தடுத்த சீசன்களுக்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது. பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த ஏமாற்றம் ஒருபுறம் இருந்தாலும், சஞ்சு சாம்சன், அன்ஷுல் கம்போஜ், கார்த்திக் சர்மா, உர்வில் படேல், நூர் அகமது போன்ற இளம் வீரர்களின் எழுச்சி சிஎஸ்கே-வின் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்பது மாற்று கருத்து இல்லை.