ETV Bharat / sports

WPL 2026: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - வெற்றியுடன் தொடங்குவது யார்?

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 7 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், ஆர்சிபி அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 9, 2026 at 3:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

நவி மும்பை: மகளிர் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் முனைப்பில் மகளிர் பிரீமியர் லீக் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இதில் 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளன. இதனையடுத்து இந்த தொடரின் நான்காவது சீசன் இன்று (ஜனவரி 9) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

அந்தவகையில் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி களமிறங்கவுள்ளது. அணியின் பேட்டிங்கில் அமஞ்சோத் கவுர், நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர், சஜீவன் சஞ்ஜனா உள்ளிட்டோர் உள்ளனர். பந்துவீச்சில் சைகா இஷாக், ஷப்னிம் இஸ்மையில், சன்ஸ்க்ருதி குப்தா உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி

மறுபக்கம் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் காண்கிறது. அணியின் பேட்டிங்கில் ஜார்ஜியா வோல், கிரேஸ் ஹாரிஸ், ரிச்சா கோஷ், நதின் டி கிளார்க் ஆகியோரும், பந்துவீசில் பிரியாங்கா பாட்டில், பூஜா வஸ்திரேகர், அருந்ததி ரெட்டி, லாரன் பெல், தயாளன் ஹேமலதா உள்ளிட்டோரும் உள்ளனர்.

நேருக்கு நேர்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 7 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டி.ஒய்.பாட்டில் மைதனாம்

நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானம பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு இதுவரை நடைபெற்ற 8 டி20 போட்டிகளில் 2 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 5 முறை சேஸிங் செய்த அணிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை ஒளிபரப்பு

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் இத்தொடரை ஆன்லைனில் காண முடியும். இந்திய நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு தொடக்க இருக்கும் நிலையில், டாஸ் நிகழ்வானது இரவு 7 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிங்க

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ் மகளிர்: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், ஜி கமலினி, ஷப்னிம் இஸ்மையில், சைகா இஷாக், சஜீவன் சஞ்ஜனா, சமஸ்கிருதி குப்தா, பூனம் கெம்னார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), நதின் டி கிளர்க், ஸ்ரேயங்கா பாட்டீல், பூஜா வஸ்த்ரகர், ரிச்சா கோஷ், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஜார்ஜியா வோல், லாரன் பெல், கவுதமி நாயக், லின்ஸி ஸ்மித்.