ETV Bharat / sports

காமன்வெல்த் 2026: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

சர்வதேச அரங்கில் சாதனை படைத்த வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மொத்தம் ரூ.80 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

காமன்வெல்த் 2026
தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் விஜய் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : August 5, 2026 at 5:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு மற்றும் ராஜா முத்துப்பாண்டி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்-யைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, இந்த முறை பல முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் தொடரிலிருந்து நீக்கப்பட்ட நிலையிலும், இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களைக் குவித்து, ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இத்தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மும்முறை தாண்டுதல் (Triple Jump) பிரிவில் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். அதேபோல், பளுதூக்குதல் பிரிவில் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் விஜய்
சித்ரவேலின் தந்தையிடம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் விஜய் (ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்தன. இந்நிலையில், தாயகம் திரும்பிய தமிழக வீரர்கள் ராஜா முத்துப்பாண்டி மற்றும் செல்வ பிரபு ஆகியோர் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்-யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இவர்களில் பிரவீன் சித்ரவேல் இன்னும் நாடு திரும்பாத காரணத்தால், அவரது தந்தை இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இச்சந்திப்பின் போது வீரர்களுக்கான உயரிய ஊக்கத்தொகையையும் முதலமைச்சர் வழங்கினார்.

அந்தவகையில், ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். அதே போல், மும்முறை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்ட வீரர் பிரவீன் சித்ரவேலுக்கும் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை அவரது தந்தையிடம் முதலமைச்சர் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க:

அதேபோல், மும்முறை தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டுத் துறைச் செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.