ETV Bharat / sports

இலங்கை vs இந்தியா | தோல்வியின் விளிம்பிலிருந்து இலங்கையை மீட்ட சோனல் தினுஷா; டிராவில் முடிந்தது கொழும்பு டெஸ்ட்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மிரட்டிய இலங்கை வீரர் சோனல் தினுஷா, ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இலங்கை vs இந்தியா
இலங்கை vs இந்தியா (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 27, 2026 at 5:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கொழும்பு: இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்பில் உள்ள சிங்களீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோரின் அபாரமான சதங்களின் உதவியோடு, தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 117 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜுரெல் 115 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கெஷரா நுவந்தா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் சாதகமாக அமையவில்லை.

இலங்கை அணியின் முன்னணி வீரர்களான லஹிரு உதாரா, கமில் மிஷாரா, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பசிந்து சூர்யபந்தாரா - சோனல் தினுஷா இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட பசிந்து சூர்யபந்தாரா 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனல் தினுஷா, இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 103 ரன்கள் சேர்த்த நிலையில் சோனல் தினுஷா தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ-ஆன் ஆனது. இந்திய அணித் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர், 213 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில், லஹிரு உதாரா 2 ரன்களுக்கும், கமில் மிஷாரா 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பசிந்து சூர்யபந்தாரா - கமிந்து மெண்டிஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இப்போட்டியில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், 3வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 55 ரன்களில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்களில் விக்கெட்டை இழந்து மீண்டும் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 229 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின் ஜோடி சேர்ந்த சோனல் தினுஷா மற்றும் கேஷரா நுவந்தா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுத்தனர். இதில் சோனல் தினுஷா அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஷரா நுவந்தா 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரபாத் ஜெயசூர்யாவும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சோனல் தினுஷா, இந்த இன்னிங்ஸிலும் சதம் விளாசி மிரட்டினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சோனல் தினுஷா அடிக்கும் மூன்றாவது சதமாகவும் இது அமைந்தது. அதன்பின் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இதையும் படிங்க:

இதில் சோனல் தினுஷா 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 133 ரன்களுடனும், அசிதா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் மானவ் சுதர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இரு அணி கேப்டன்களும் பரஸ்பரம் கை குலுக்கியதை அடுத்து, இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.