சீனா ஓபன் 2026 | இறுதிப்போட்டியில் மோதும் குயின்வென் ஜெங் vs மிர்ரா ஆண்ட்ரீவா!
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் குயின்வென் ஜெங் மற்றும் மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்


Published : October 10, 2026 at 7:05 PM IST
ஹைதராபாத்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் சீனாவின் நட்சத்திர வீராங்கனை குயின்வென் ஜெங் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 சீனா ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் நிகோலா பார்டுன்கோவாவை எதிர்கொண்டார்.
மிர்ரா ஆண்ட்ரீவா அசத்தல்
இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆண்ட்ரீவா, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த புள்ளிகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் ஆண்ட்ரீவா அபாரமாக செயல்பட்டார். இதனால் இரண்டாவது செட்டையும் அவர் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
Storming into the final ⚡️ Mirra Andreeva closes out an incredible performance defeating Bartunkova 6-2, 6-2 and reaches the final in Beijing! #ChinaOpen https://t.co/NhvaPVNUc9
— wta (@WTA) October 10, 2026
போட்டியின் முடிவில் ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நிகோலா பார்டுன்கோவாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி மிர்ரா ஆண்ட்ரீவா சாதனை படைத்துள்ளார்.
சொந்த மண்ணில் மிரட்டிய குயின்வென்
இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், சீனாவின் முன்னணி வீராங்கனை குயின்வென் ஜெங், பெல்ஜியத்தின் அனுபவம் வாய்ந்த எலிஸ் மெர்டென்ஸை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே இரு வீராங்கனைகளும் புள்ளிகளைப் பெற கடுமையாகப் போராடினர். இதனால் முதல் செட் ‘டை-பிரேக்கர்’ வரை சென்றது. எனினும், இக்கட்டான சூழலில் சிறப்பாக செயல்பட்ட குயின்வென் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் குயின்வென் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். இதன் காரணமாக அந்த செட்டையும் அவர் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் குயின்வென் ஜெங் 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எலிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினார்.
Watch the Match Highlights from Qinwen Zheng vs. Elise Mertens from the Semifinal in Beijing. #WTA #tennis #ChinaOpen #Beijing https://t.co/oVR5s4LlgY
— wta (@WTA) October 10, 2026
| இதையும் படிங்க |
இதனையடுத்து நாளை (அக்டோபர் 11) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் குயின்வென் ஜெங் மற்றும் மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் சாம்பியன் பட்டத்திற்காகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். சொந்த மண்ணில் தனது முதல் WTA 1000 பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஜெங்கும், அவருக்குக் கடும் சவால் அளிக்க ஆண்ட்ரீவாவும் தயாராகி வருவதால், இந்த இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

