சீனா ஓபன் 2026 | சாம்பியன் பட்டம் வென்று குயின்வென் ஜெங் வரலாற்றுச் சாதனை!
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் வரலாற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் சீன வீராங்கனை என்ற சாதனையையும் குயின்வென் ஜெங் படைத்துள்ளார்.


Published : October 11, 2026 at 7:44 PM IST
ஹைதராபாத்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி சீனாவின் நட்சத்திர வீராங்கனை குயின்வென் ஜெங் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2026 சீனா ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், சீனாவைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் குயின்வென் ஜெங், ரஷ்யாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் கைப்பற்ற, முதல் செட் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. இறுதியில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்வென் ஜெங் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் வெற்றிக்காக இரு வீராங்கனைகளும் கடுமையாகப் போராடினர்.
The winning moment 🤩 History sealed with an ace from Zheng Qinwen! #ChinaOpen https://t.co/U9tSRpv7KN
— wta (@WTA) October 11, 2026
ஆனாலும், ஆட்டத்தின் போக்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த குயின்வென் ஜெங், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி மிரா ஆண்ட்ரீவாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்த குயின்வென் ஜெங், சீனா ஓபன் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த குயின்வென் ஜெங், கடந்த 2025ஆம் ஆண்டு உலக தரவரிசையில் 4ஆவது இடத்தை எட்டினார். இதன் மூலம் முன்னாள் வீராங்கனை லீ நாவிற்குப் பிறகு, டபிள்யூ.டி.ஏ டாப் 5 தரவரிசைக்குள் நுழைந்த இரண்டாவது சீன வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்திருந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட முழங்கை காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக, அவரது தரவரிசை 50 இடங்களுக்குக் கீழ் சரிந்தது. எனினும், காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், அமெரிக்க ஓபனில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி காலிறுதி வரை முன்னேறினார்.
ULTIMATE GLORY 🏆 Zheng Qinwen makes history, becoming the first Chinese player to win the China Open trophy! #ChinaOpen https://t.co/NTidOJoWFk
— wta (@WTA) October 11, 2026
| இதையும் படிங்க |
தற்போது சொந்த மண்ணில் சீனா ஓபன் பட்டத்தைக் கைப்பற்றி, டென்னிஸ் உலகில் தனது கம்பேக் கொடுத்துள்ளார். வரலாற்றுச் சாதனை படைத்த குயின்வென் ஜெங்கிற்கு டென்னிஸ் உலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

