6 மணி நேரத்தில் 50 வீரர்களை வீழ்த்தி வெற்றி; ஃப்ரீஸ்டைலில் உலக சாதனை படைத்த 6-ம் வகுப்பு மாணவன் - யார் இந்த பரத் குமார்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 -ம் வகுப்பு மாணவன் ஃப்ரீஸ்டைல் அல்லது 'செஸ் 960' என்ற கடினமான பிரிவில் உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Published : January 8, 2026 at 7:29 PM IST
- ஆர்.மணிகண்டன்
உலக அளவில் சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, டி குகேஷ் போன்ற வீரர்கள் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளும் சதுரங்க விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதுபோன்ற ஆரோக்கியமான சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 'ஃப்ரீஸ்டைல்' அல்லது 'செஸ் 960' என்ற கடினமான பிரிவில் உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
யார் அந்த மாணவன்?
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சதுரங்க பயிற்சியாளர் மற்றும் சர்வதேச சதுரங்க நடுவருமானவர் செல்வ மணிகண்டன். இவரது மகன் பரத் குமார் (11வயது) 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த மாணவர் தான் 'செஸ் 960' பிரிவில் 'வேர்ல்ட் நோபல் ரெகார்ட்' விருதைப் பெற்று இந்தியாவிற்கும், தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
செஸ் 960 என்றால் என்ன?
சாதாரண சதுரங்கப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் காய்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், 'ஃப்ரீஸ்டைல் சதுரங்கம்' அல்லது 'செஸ் 960' எனப்படும் பிரிவில், சிப்பாய்கள் மட்டும் தங்களுக்குரிய வரிசையில் இருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ள ராஜா, ராணி, மந்திரி, குதிரை, யானை ஆகிய காய்கள் இடமாற்றி வைக்கப்பட்டிருக்கும்.
இதனால் மொத்தம் 960 விதமான நிலைகளில் காய்களை அடுக்க முடியும் என்பதால் இதற்கு செஸ் 960 என பெறர் வந்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் செஸ் உலக சாம்பியன் பாபி பிஷ்ஷர் தான் இந்த செஸ் 960 விளையாட்டை முதல் முதலில் அறிமுகப்படுத்தினார். மேலும் இதில் ஆரம்பகட்ட நகர்வுகளை மனப்பாடம் செய்து விளையாட முடியாது. ஒவ்வொரு முறையும் புதிய உத்திகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் இது மிகவும் கடினமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
உலக சாதனை
ஆனால் இந்த கடினமான விளையாட்டிலும் சிறப்பாக செயல்படும் பரத் குமார், அதில் தற்போது உலக சாதனையையும் படைத்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி, அவர் ஒரே நேரத்தில் 50 சதுரங்க வீரர்களுடனும் ஒரே நேரத்தில் மோதினார். அதிலும் குறிப்பாக, 50 விதமான நிலைகளில் காய்கள் அடுக்கப்பட்டிருந்த நிலையிலும், அவர் 6 மணி நேரம் தொடர்ந்து விளையாடியதுடன், அனைத்து வீரர்களையும் வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

இந்த ஃப்ரீஸ்டல் செஸ் விளையாட்டில் ஒரு வீரருடன் விளையாடி வெற்றி பெறுவதே மிகக் கடினம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பரத் குமார் 6 மணி நேரத்தில் 50 வீரர்களுக்கு எதிராகவும் வெற்றியைப் பதிவு செய்திருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தையும், பிரம்மிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த அசாத்தியமான திறமையை அங்கீகரித்து 'வேர்ல்ட் நோபல் ரெகார்ட்' நிறுவனம் சமீபத்தில் உலக சாதனை விருதினை பரத் குமாருக்கு வழங்கி கவுரவித்தது.
உலக சாம்பியன் பட்டம் வெல்வதே இலக்கு
இந்த வெற்றி குறித்து ஈடிவி பாராத்-திடம் பேசிய மாணவன் பரத் குமார்,"நான் மூன்று வயதில் இருந்தே செஸ் விளையாடி வருகிறேன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட தேசியப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இந்த செஸ் 960 சாதனைக்காக கடந்த 6 மாதங்களாகத் தீவிரப் பயிற்சி எடுத்தேன். எனது அப்பாவும், பயிற்சியாளருமான செல்வ மணிகண்டன் எனக்கு கடுமையாக பயிற்சி கொடுத்தார். ஆரம்பத்தில் சிறு பதற்றம் இருந்தாலும், வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து உலக சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்பது தான் எனது லட்சியம்" என்றார்.

தந்தை பெருமிதம்
தனது மகனின் சாதனை குறித்து பேசிய சர்வதேச சதுரங்க நடுவரும், பயிற்சியாளருமான செல்வ மணிகண்டன், "சாதாரண செஸ் போட்டிகளில் தொடக்க நகர்வுகள் நிலையாக இருக்கும். ஆனால், செஸ் 960 பிரிவில் ஆட்டம் தொடங்கும்போதே அது ஒரு நடுப்பகுதி ஆட்டத்தைப் போலச் சிக்கலாக இருக்கும். 50 வெவ்வேறு நிலைகளில் 6 மணி நேரம் போராடி இந்த வெற்றியைப் பரத் குமார் பெற்றுள்ளார். ஆறு மாத கால உழைப்பிற்குப் பிறகு இந்த உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க |
பாளையங்கோட்டையில் சாதாரண நிலையில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று உலக சாதனை வரை உயர்ந்துள்ள மாணவன் பரத் குமாருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவர் மென்மேலும் சாதனைகளைப் படைப்பதுடன், உலக அரங்கில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

