ETV Bharat / sports

பென் ஸ்டோக்ஸின் புதிய அவதாரம்: பிக் பேஷ் லீக் டி20 தொடரில் அதிரடி கம்பேக்!

எதிர்வரும் பிக் பேஷ் லீக் தொடரில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் (Adelaide Strikers) அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ் (கோப்புப்படம்) (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : September 1, 2026 at 5:04 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் டி20 தொடரில் விளையாட அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் தற்சமயம் இங்கிலாந்தின் உள்ளூர் தொடர்களில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் அவர் உலகப் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

அதன்படி, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக்கில் (BBL) விளையாட பென் ஸ்டோக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக் பேஷ் லீக் தொடரின் புதிய நேரடி ஒப்பந்த விதிகளின் படி, பென் ஸ்டோக்ஸை சுமார் 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பிக் பேஷ் லீக் தொடர் வரலாற்றிலேயே மிக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, சிட்னி சிக்ஸர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் போன்ற பல முன்னணி அணிகள் பென் ஸ்டோக்ஸை வாங்க கடுமையான போட்டியில் ஈடுபட்ட நிலையில், இறுதியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பிக் பேஷ் லீக் தொடரில் தனது கம்பேக்கைக் கொடுக்கவுள்ளார்.

அவர் இதற்குமுன் கடந்த 2014-15 சீசனில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி, பேட்டிங்கில் ஒரு அரைசதம் உட்பட 128 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதன்பின் காயம் மற்றும் சர்வதேச தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக பிக் பேஷ் லீக் தொடரில் பங்கேற்காமல் இருந்த ஸ்டோக்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இத்தொடரில் தற்போது களமிறங்கவுள்ளார்.

இதுகுறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், "பிக் பேஷ் லீக் தொடரின் 16ஆவது சீசனில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் இணைவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவதை நான் எப்போதும் ரசிப்பவன். அதனால், ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் இணைவதற்கான இந்த அருமையான வாய்ப்பு தேடி வந்தபோது, அதை என்னால் தவறவிட முடியவில்லை.அணியின் இளம் வீரர்களுடன் இணைந்து பல சிறந்த நினைவுகளை உருவாக்கவும், ஸ்ட்ரைக்கர்ஸ் ரசிகர்களை மகிழ்விக்கவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

தற்சமயம் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த முறை எந்தவித சர்வதேச போட்டித் தடங்கலும் இன்றி, டிசம்பர் 12 முதல் தொடங்கும் இந்த சீசன் முழுவதிலும் அவரால் விளையாட முடியும். இதனால், பென் ஸ்டோக்ஸின் வருகை எதிர்வரும் பிபிஎல் தொடரில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு இருமடங்கு பலத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.