ETV Bharat / sports

மகளிர் கிரிக்கெட்: ஜார்ஜியா வோல் அபார சதம்; இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியா மகளிர் அணி
ஆஸ்திரேலியா மகளிர் அணி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 27, 2026 at 4:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹாபர்ட்: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹாபர்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை வழங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். பின்னர் 31 ரன்களில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்த பிரதிகா ராவலும் 52 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களை சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட், அலான கிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜியா வோல் மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் பதிவு செய்ய, பார்ட்னர்ஷிப் 119 ரன்களை கடந்தது.

இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போப் லிட்ச்ஃபீல்ட் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 80 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பெத் மூனியும் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜியா வோல் சதம் விளாசியதுடன் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 101 ரன்களை சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதையும் படிங்க

இறுதியில் ஆஷ்லே கார்ட்னர் 19 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 36.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.