23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வங்கதேசம்
2003ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் வங்கதேச அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.


Published : February 25, 2026 at 3:30 PM IST
ஹைதராபாத்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் படுதோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய அணி, தங்களின் அடுத்தகட்ட ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2026 ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி டெஸ்ட் தொடரில் அதிகம் கவனம் செலுத்தும் வகையில் இந்த அட்டவணையானது தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2003ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் வங்கதேச அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த தொடர் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாகவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 ஆம் தேதி டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் கடந்த 2004ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக இங்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தன.
The dates are locked in for the Aussie men's side's next Test campaign.
— cricket.com.au (@cricketcomau) February 25, 2026
DETAILS: https://t.co/GfFK1na6Kk pic.twitter.com/PB0sn0nUti
அதன்பின் இங்கு இதுநாள் வரையிலும் ஒரு டெஸ்ட் போட்டி கூட நடத்தப்படவில்லை. இதுதவிர 2008ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி டார்வினில் தங்களுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெக்கேவில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் நடத்தப்படும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். மேலும் ஆஸ்திரேலியாவின் 12ஆவது சர்வதேச டெஸ்ட் மைதானமாகவும் இது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், அதில் 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
Test cricket to return to Darwin for the first time since 2004 as Australia reveal details for this year's home #WTC27 series against Bangladesh 📷https://t.co/QSxgsaUrVz
— ICC (@ICC) February 25, 2026
அதேசமயம் வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுதவிர 2017ஆம் ஆண்டிற்கு பிறகு இவ்விரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
டெஸ்ட் தொடர் அட்டவணை
- முதல் டெஸ்ட்: ஆகஸ்ட் 13-17, மராரா மைதானம், டார்வின்
- இரண்டாவது டெஸ்ட்: ஆகஸ்ட் 22-26, கிரேட் பேரியர் ரீஃப், மெக்கே
இதையும் படிங்க |
வங்கதேச தொடருக்குப் பிறகு, ஆஸ்திரேலியா அணி செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா, அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

