ETV Bharat / sports

சிட்னி டெஸ்ட்: முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா- ஆஷஸ் தொடரை கைப்பற்றி அசத்தல்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

சிட்னி டெஸ்ட்
சிட்னி டெஸ்ட் (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : January 8, 2026 at 9:18 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 384 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். இதில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 138 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 567 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 183 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிரௌலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜேக்கப் பெத்தெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய பென் டக்கெட் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோ ரூட்டும் 6 ரன்களில் நடையைக் கட்டினார்.

மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ஜேக்கப் பெத்தெல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 42 ரன்களிலும், வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ஜேமி ஸ்மித் 26 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும், பிரைடன் கார்ஸ் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதன் காரணமாக நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தை ஜேக்கப் பெத்தெல் 142 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் ஜேக்கப் பெத்தெல் 154 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஷ் டங்கும் 6 ரன்களில் நடையைக் கட்டினார்.

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 342 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பியூ வெப்ஸ்டர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் -ஜேக் வெதர்லெட் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர்.

இதில் டிராவிஸ் ஹெட் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஜேக் வெதர்லெட்டும் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 6 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னேவும் 37 ரன்களை எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

இதையும் படிங்க

இறுதியில் அலெக்ஸ் கேரி 16 ரன்களையும், கேமரூன் க்ரீன் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 4-1 என்ற கணக்கில் ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிராவிஸ் ஹெட்டிற்கும், தொடர் நாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்கிற்கும் வழங்கப்பட்டது.