ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம் | டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஹசன் மஹ்மூத்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கடந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற மற்றொரு மைல்கல்லையும் ஹசன் மஹ்மூத் எட்டியுள்ளார்.


Published : October 11, 2026 at 2:41 PM IST
ஹைதராபாத்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஹசன் மஹ்மூத் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 83 ரன்களையும், ஷாத்மான் இஸ்லாம் 67 ரன்களையும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் சலீம் சஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் ரஹ்மத் ஷா சதம் விளாசி அசத்தினார். மேலும் தொடக்க வீரர் அப்துல் மாலிக் 62 ரன்களையும், இக்ரம் அலிகில் 32 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் ரஹ்மத் ஷா 102 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Hasan Mahmud reaches 50 Test wickets for Bangladesh! Another milestone for the Tigers’ pace attack. 🇧🇩🏏 #Bangladesh #Tigers #HasanMahmud #TestCricket https://t.co/4Idq6vS4Cg
— Bangladesh Cricket (@BCBtigers) October 11, 2026
இதனால் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், எபோடட் ஹசன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 106 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹேட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் வங்கதேச அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Tiger of the Day! Hasan Mahmud delivers a fifer and a hat-trick in the Only Test against Afghanistan. 🇧🇩🔥 #Bangladesh #Tigers #HasanMahmud #TestCricket https://t.co/LxrUrusrIi
— Bangladesh Cricket (@BCBtigers) October 11, 2026
| இதையும் படிங்க |
இதற்கு முன்பு வங்கதேச அணிக்காக சுழற்பந்து வீச்சாளர்களான அலோக் கபாலி மற்றும் சோஹாக் காசி ஆகிய இருவர் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஹேட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர். அந்த வகையில், தற்சமயம் 26 வயதான ஹசன் மஹ்மூத் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹேட்ரிக் எடுக்கும் 3ஆவது வங்கதேச பந்துவீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

